உயர்திணையிடத்துப் பெண்மைத் தன்மை குறித்த ஆண்மை திரிந்த பெயர்ச்சொல்லும், தெய்வத்தைக் குறித்த பெயர்ச்சொல்லும், இவையெனத் தம் பொருளை வேறு அறிய நிற்கும் ஈற்றெழுத்தினைத் தமக்குடைய அல்ல, உயர்திணையிடத்து அதற்குரிய பாலாய் வேறுபட்டு இசைக்கும் ; எ-று. பால் வேறுபட்டு இசைத்தலாவது தாம் உயர்திணைப் பெயராய் ஆடூஉ அறிசொல் முதலாயினவற்றிற்குரிய ஈற்றெழுத்தே தம் வினைக்கு ஈறாக இசைத்தல். எடுத்துக்காட்டு: பேடி வந்தாள், பேடர் வந்தார், பேடியர் வந்தார் எனவும்; தேவன் வந்தான், தேவி வந்தாள், தேவர் வந்தார் எனவும் வரும். அலிப்பெயரின் நீக்குதற்குப் `பெண்மை சுட்டிய' என்றும் மகடூஉப் பெயரின் நீக்குதற்கு `ஆண்மை திரிந்த' என்றுங் கூறினார். பெண்மை சுட்டிய எனவே பெண்மை சுட்டாப் பேடு என்பதும் ஒழிக்கப்பட்டதாம். பெண்மை திரிதலும் உண்டேனும் ஆண்மை திரிதல் பெரும்பான்மையாகலான் `ஆண்மை திரிந்த' என்றார். பேடியர் பேடிமார் பேடிகள் என்பனவும் அடங்குதற்குப் பேடியென்னும் பெயர்நிலைக்கிளவி யென்னாது , `பெண்மை சுட்டிய ஆண்மை திரிந்த பெயர் நிலைக் கிளவி' என்றார். பெண்மை சுட்டிய என்னும் பெயரெச்சம் பெயர்நிலைக் கிளவி என்னும் பெயர் கொண்டது. ஆண்மை திரிந்த என்பது இடைநிலை. `தன்மை திரிபெயர்'1 (சொல்.56) என்றாற்போலச் சொல்லோடு பொருட்கு ஒற்றுமை கருதி `ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி' என்றார். உயர்திணை மருங்கிற் பால்பிரிந்திசைக்கும் எனவே தமக்கென வேறு ஈறு இன்மை பெறப்படுதலின், `இவ்வென அறியும் அந்தம் தமக்கிலவே' எனல் வேண்டா எனில்' தமக்கென வேறு ஈறு உடையவாய்2 ஆடூஉவறி சொல் முதலாயின வற்றிற்குரிய ஈற்றானும் இசைக்குங்கொல் என்னும் ஐயம் நீக்குதற்கு, `அந்தம் தமக்கிலவே' எனல் வேண்டும் என்பது. பாலுள் அடங்காத பேடியையும் திணையுள் அடங்காத தெய்வத்தையும் பாலுள்ளும் திணையுள்ளும் அடக்கியவாறு. சுட்டிய என்பது செய்யிய என்னும் வினையெச்சமென்றும், ஆண்மை திரிதல் சொற்கின்மையின் பெயர்நிலைக்கிளவி என்பது ஆகுபெயராய்ப் பொருண்மேல் நின்ற தென்றும் உரையாசிரியர் கூறினாராலெனின் : ஆண்மை திரிதல் பெண்மைத்தன்மை எய்துதற் பொருட்டன்றிப் பேடிக்கும் இயல்பாகலின் பெண்மை சுட்ட வேண்டி ஆண்மை திரிந்த என்றல் பொருந்தாமையானும் பொருளே கூறலுற்றாராயின் ஆசிரியர் பேடியும் தெய்வமும் என்று தாம் கருதிய பொருள் இனிது விளங்கச் சுருங்கிய வாய்பாட்டாற் சூத்திரிப்பாராகலானும், அவர்க்கது கருத்தன்மையான் உரையாசிரியர்க்கும் அது கருத்தன்றென்க. (4)
1. தன்மை திரிபெயர் - அலி என்பது. 2. தமக்குரிய ஈற்றான் இசைப்பதன்றியும் எனவும் பாடமுண்டு.
|