9.எச்சவியல்

சொற்களின் வகை

திசைச் சொல்

400செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி.

செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிரண்டு நிலத்துந் தாங் குறித்த பொருள் விளக்குந் திசைச்சொல் என்றவாறு. என்றது, அவ்வந்நிலத்துத் தாங் குறித்த பொருள் விளக்குவதல்லது அவ்வியற்சொற்போல எந்நிலத்துந் தம்பொருள் விளக்கா வென்றவாறாம்.

பன்னிருநிலமாவன பொங்கர்நாடு, ஒளிநாடு, தென்பாண்டிநாடு, குட்டநாடு, குடநாடு, பன்றிநாடு, கற்காநாடு, சீதநாடு, பூழிநாடு, மலைநாடு, அருவாநாடு, அருவாவட தலை எனச் செந்தமிழ் நாட்டுத் தென்கீழ்பான் முதலாக வட கீழ்பாலிறுதியாக எண்ணிக்கொள்க.1

2கொடுந்தமிழ் நிலமாக சேனாவரையர் கூறிய பன்னிரு நிலம் 12 ஆம் நூற்றாண்டிற் கேற்றவையாதலின், தொல்காப்பியர் குறித்தவையாகா.

தென்பாண்டிநாட்டார் ஆ, எருமை என்பவற்றைப்பெற்ற மென்றும், தம்மாமியென்பதனைத் தந்துவையென்றும் வழங்குப. பிறவுமன்ன.

தங்குறிப்பினவென்று தனிமொழி தம்பொருளுணர்த்து மாற்றுக்குச் சொல்லினார். இருமொழி தொடருமிடத்துத் தன்னை வந்தான் என வேண்டியவாறு வரப்பெறு மென்றாரல்லரென்பது.

(4)

1.பன்னிருநிலமாவன:-வையாற்றின்...நாடு; ஒளிநாடு, தென்பாண்டிநாடு, கருங்குட்டநாடு, குடநாடு, பன்றிநாடு, கற்காநாடு, சீதநாடு, பூழிநாடு, மலாடு, அருவாநாடு, அருவாவடதலை என்ப. இவை செந்தமிழ் நாட்டகத்த செந்தமிழ் நாடென்றமையால், பிறநாடாக வேண்டுமென்பார் உதாரணங்காட்டுமாறு:- "கன்னித் தென்கரைக் கடற்பழந்தீபம்; கொல்லங் கூபகஞ்சிங்களமென்னும் எல்லையின் புறத்தவும், கன்னடம், வடுகம், கலிங்கம், தெலிங்கம், கொங்கணம், துளுவம், குடகம், குன்றகம், என்பன குடபாலிருவிறச் சையத் துடனுறைபு கூறுந் தமிழ் திரிநிலங்களும் முடியுடையவ ரிடுநிலவாட்சியின் அசுர மேம்பட்ட குறுநிலக் குடுமிகள் பதின்மரும் உடனிருப் பிருவருமாகிய பன்னிருவர் அரசரும் படைத்த பன்னிருதேயத்தினும் தமிழ்ச் சொல்லாதற்கு விருப்புடையன" என்றமையானும், ` தமிழ் கூறு நல்லுலகத்து வழக்குஞ் செய்யுளுமாயிரு முதலின் எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி' என நிறுத்துப் பின்னுஞ் `செந்தமிழியற்கை சிவணிய நிலத்தொடு முந்து நூல் கண்டு' என ஓதியவதனாற் சிவணிய நிலமாவது எல்லை குறித்த நிலத்தைச் சார்ந்த நிலமென வேண்டுதலானும், பன்னிரு நிலமாவன:-

குமரியாற்றின் தென்கரைப்பட்ட பழந்தீபமும், கொல்லமும், கூபகமும், சிங்களமும், சையத்தின் மேற்குப்பட்ட கொங்கணமுந் துளுவமுங், குடகமுங், குன்றகமும், கிழக்குப் பட்ட கருநடமும், வடுகும், தெலிங்கும், கலிங்கும் என்று கொள்ளப்படும்.

இவற்றுள், கூபகமுங் கொல்லமுங் கடல் கொள்ளப் படுதலின், குமரியாற்றின் வடகரையைக் கொல்லமெனக் குடியேறினார் போலும். பஞ்சத் திராவிடமெனவும் வடநாட்டார் உரைப்பவாகலான், அவையைந்தும் வேங்கடத்தின் தெற்காதலும் கூடாமையுணர்க.