(இ-ள்) உயர்திணைக்கண்ணும் அஃறிணைக்கண்ணும் பெயரினாலும் வினையினாலும் பொதுமையிற் பிரிந்து ஆண்மைக்கும் பெண்மைக்கும் உரியவாய் வருவன எல்லாம் வழுவாகா, வழக்குவழிப் பட்டனவாகலான்; எ-று. உயர்திணைக்கண்ணும் அஃறிணைக்கண்ணும் என்பது அதிகாரத்தான் வந்தது. `தொடியோர்1 கொய்குழையரும்பிய குமரி ஞாழல்' என்பது உயர்திணைக்கண் பெயரிற் பிரிந்த ஆணொழி மிகுசொல். வடுகரசராயிரவர் மக்களையுடையவர் என்பது பெயரிற் பிரிந்த பெண்ணொழி மிகுசொல். இவர் வாழ்க்கைப் பட்டார் என்பது தொழிலிற் பிரிந்த ஆணொழி மிகுசொல். இவர் கட்டிலேறினார் என்பது தொழிலிற் பிரிந்த பெண்ணொழி மிகுசொல். நம்பி நூறெருமையுடையன் என்பது அஃறிணைக்கண் பெயரிற் பிரிந்த ஆணொழி மிகுசொல்.நம்மரசன் ஆயிரம் யானையுடையவன் என்பது பெயரிற்பிரிந்த பெண்ணொழி மிகுசொல் தொடிசெறித்தலும், மக்கட்டன்மையும், இல்வாழ்க்கைப்படுதலும் கட்டிலேறுதலும்,எருமைத்தன்மையும், யானைத் தன்மையும் ஒழிக்கப்படும் பொருட்குமுண்மையால் பொதுவாய் நிற்கற்பாலன ஒருபாற்குறியவாய் வருதலின், மரபுவழுவமைத்தவாறு. பிறசொல்லாற் பிரிவன `வேறுபடு வினையினும் இனத்தினுஞ் சார்பினும்' (சொல்-53) எனவும், `தெரிநிலையுடைய அஃறிணையியற் பெயர்' (சொல்-171) எனவும், `நினையுங் காலைத் தத்தம் மரபின் வினையோடல்லது பால்தெரிபிலவே' (சொல்-172) எனவும் முன்னோதப் படுதலானும், ஆண்டு வழுவின்மையானும், ஈண்டுத் தாமே பிரிவனவே கொள்க. தம்மாற்றாம் பிரியுமென்பார் `பெயரினுந் தொழிலினும், என்றார். பெயர்க்கண்ணும் வினைக்கண்ணுந் தாமே பிரிவன எனினும் அமையும். அஃறிணைக்கண் தொழிலிற் பிரிந்தன உளவேல் கண்டுகொள்க. இன்று இவ்வூர்ப் பெற்றமெல்லா மறங்கறக்கும், உழவொழிந்தன என உரையாசிரியர் காட்டினாராலோ வெனின் : - பெற்றமென்னும் பொதுப்பெயர் கறத்தலும் உழுதலுமாகிய சிறப்பு வினையால் பொதுமை நீங்குதல் வழுவன்மையான் ஈண்டைக் கெய்தாமையின், அவர்க்கது கருத்தன்றென்பது. (50) 1. தொடி என்பது வளையல், காப்பு, கடகம் (தோள் வளையல்) முதலியவற்றைக் குறிக்கும். வளையல் பெண்டிர்க்கே உரியது; கடகமும் காப்பும் இருபாலார்க்கும் உரியன. `தொடியோர்.....ஞாழல்' என்பதில் தொடியோர் பெண்டிரையே குறித்தது. அரசர் மக்களையுடையவர் என்னும்போது மக்கள் என்னுஞ் சொல் போர் மறவரைக் குறிக்கும். வாழ்க்கைப்படுதல் ஒருத்தி ஒருவனுக்கு இல்லக் கிழத்தியாதல். இச்சொல் தென்னாட்டு வழக்கு. கட்டில் என்பது அரசு கட்டில், அஃதாவது அரியணை.
|