இனமாகிய பலபொருட்கண் ஒன்றனை வாங்கிக் கூறியவழி அச்சொல் தன் பொருட்கினமாகிய பிறபொருளைக் குறிப்பால் உணர்த்தலு முரித்து; எ-று. உம்மை எதிர்மறையாகலான் உணர்த்தாமையு முரித்தென்பதாம். எ - டு: `அறஞ்செய்தான் துறக்கம் புகும்' எனவும், `இழிவறிந்துண்பான்கண் இன்பமெய்தும்' (குறள் 95 -6) எனவும் வரும். இவை சொல்லுவார்க்கு இனப்பொருளியல்பு உரைக்குங் குறிப்புள்வழி, மறஞ்செய்தான் துறக்கம் புகான், கழிபேரிரையான் இன்பமெய்தான். என இனஞ் செப்புதலும் அக் குறிப்பில்வழி இனஞ்செப்பாமையுங்கண்டு கொள்க. எடுத்த பொருளை உணர்த்தும் மொழியை `எடுத்த மொழி' என்றார். இன்னல் பொருளின் நீக்குதற்கு `இனம்' என்றார். அஃதேல் மேற்சேரிக் கோழி யலைத்தது எனக் கீழ்ச்சேரிக் கோழி யலைப்புண்டது எனவும், குடங்கொண்டான் வீழ்ந்தான் எனக் குடம் வீழ்ந்தது எனவும், இவை இனஞ் செப்புமென்றும், ஆ வாழ்க அந்தணர் வாழ்க என்பன இனஞ்செப்பாவென்றும், உரையாசிரியர் கூறினாராலெனின் : - அற்றன்று ; கீழ்ச்சேரிக் கோழி யலைப்புண்டலின்றி மேற்சேரிக் கோழி யலைத்தல் அமையாமையானும், குடம் வீழ்தலின்றிக் குடங்கொண்டான் வீழ்தல் அமையாமையானும் கீழ்ச்சேரிக் கோழி யலைப்புண்டலும் குடம் வீழ்தலும் சொல்லாலன்றி1 இன்றியமையாமையாகிய பொருளாற்றலால் பெறப்படுமாகலான் ஈண்டைக்கெய்தா, இது சொல்லாராய்ச்சியாகலா னென்பது2 இன்னொரன்ன சொல்லாற்றலால் பெறப்பட்டனவெனின் : - புகையுண் டென்றவழி எரியுண்மை பெறுதலுஞ் சொல்லாற்றலால் பெறப்பட்டதா மென்பது. இனி ஆ வாழ்க அந்தணர் வாழ்க என்புழிச் சொல்லுவான் ஒழிந்த விலங்கும் ஒழிந்த மக்களுஞ் சாகவென்னுங் கருத்தின னாயின் இவையுமினஞ் செப்புவன வன்றோவென்பது. அதனான் அவை போலியுரை யென்க. ஒருதொடர் ஒரு பொருளுணர்த்தி யமையாது வேறோரு பொருளுங் குறித்து நிற்றல் வழுவாயினும் அமைக என மரபுவழுக்காத்தவாறு. (60)
1. சொல்லாற்றலானன்றி என இருத்தல் நன்று. 2. ஓர் ஊரை அல்லது சேரியைச் சூழக் கீழைச்சேரி மேலைச்சேரி வடசேரி தென்சேரி எனப் பல சேரிகள் இருத்தல் கூடுமாதலானும் , குடஞ்சுமப்பான்குடம் தலையிலிருந்தபடியே உட்கார்ந்தாற்போற் கீழே விழுதலுமுண்டாதலானும், `கீழ்ச்சேரிக் கோழி யலைப்புண்டலின்றி மேற்சேரிக் கோழி யலைத்தல் அமையாமையானும் குடம் வீழ்தலின்றிக் குடங்கொண்டான் வீழ்தல் அமையாமையானும்' என்று சேனாவரையர் கூறுவது பொருந்தாது.
|