நான்கு சொற்கும் பொது விலக்கணம் உணர்த்தினார் அதற்கிடையீடின்றி அவற்றது சிறப்பிலக்கணம் உணர்த்துதன் முறைமையாயினும் வேற்றுமையிலக்கணம் உணர்த்துதற்கு வேறிடமின்மையானும், பொது விலக்கணமாதல் ஒப்புமையானும், உருபேற்றல் பெயர்க்கிலக்கணமாகலின் வேற்றுமையுணர்த்திப் பெயருணர்த்தல் முறையாகலானும், கிளவியாக்கத்திற்கும் பெயரியற்குமிடை வேற்றுமையிலக்கணம் உணர்த்திய எடுத்துக்கொண்டார். வேற்றுமையாவன பெயரும் ஓரிடைச்சொல்லுமாகலின், அவற்ற திலக்கணமும் பொது விலக்கணமேயாம்1 வேற்றுமையிலக்கணமென ஒன்றாயினும் சிறப்புடைய எழுவகை வேற்றுமையும் அவற்றது மயக்கமும் விளி வேற்றுமையுந் தனித்தனியுணர்த்தத் தகும் வேறுபாடு யாப்புடைமையான் , மூன்றோத்தானுணர்த்தினார். பொதுவிலக்கணமுணர்த்திச் சிறப்பிலக்கணம் உணர்த்துதல் முறையாகலின், முதற்கண்ணதாகிய பெயர்ச்சொற்குப் பயனிலை கோடலும்2 உருபேற்றலும்3 காலந்தோன்றாமையுமாகிய4 இலக்கணமுணர்த்துவார் இயைபுபட்டமையான் வேற்றுமையிலக்கணம் உணர்த்தினாரென மேலோத்தினோடு இவ்வோத்திடையியைபு கூறினாரால் உரையாசிரியரெனின் : - அற்றன்று ; இவ் வோத்துப் பெயரிலக்கணம் நுதலியெடுத்துக் கொள்ளப்பட்டதாயின், உருபேற்றலும் பயனிலை கோடலும் காலந்தோன்றாமையுமாகிய பெயரிலக்கணம் முன்னோதி, இயைபு படுதலான் வேற்றுமையுணர்த்துங் கருத்தினராயின் அவற்றையும் இன்ன விலக்கணத்த என உணர்த்திப் பின்னும் எடுத்துக்கொண்ட பெயரிலக்கணமே பற்றி யோதிப் பெயரியலென ஓரோத்தான் முடியற் பாற்றன்றே ; அவ்வாறன்றி வேற்றுமையிலக்கணமே முன்கூறி `அன்றி யனைத்தும் பெயர்ப்பயனிலையே' (சொல் - 69) எனவும், `ஈறுபெயர்க் காகு மியற்கைய வென்ப' (சொல் - 69) எனவும் வேற்றுமையிலக்கணம் கூறி அச்சூத்திரத்தாற் பயனிலை கோடலும் உருபேற்றலும் பெயர்க்கிலக்கண மென்பது உய்த்துணர வைத்துப் பின்னும் வேற்றுமையிலக்கணமே யுணர்த்தி, இதனை வேற்றுமையோத்தென்றும், அவற்றது மயக்கமுணர்த்திய ஒத்தை வேற்றுமை மயங்கியலென்றும், சிறப்பில்லா விளிவேற்றுமையுணர்த்திய ஓத்தை விளிமரபென்றும், நுதலியதனாற் பெயர் கொடுத்து மூன்றோத்தாக வைத்து, பெயரிய லென `வேறோரோத்திற்குப் பெயர் கொடுத்தமையானும் எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே' (சொல் - 155) என்பது முதலாகிய ஐந்து சூத்திரமும் பெயரிலக்கண முணர்த்து மோத்தின் முன் வையாது இடைவைத்தல் பொருந்தாமையானும், இவ் வோத்துப் பெயரிலக்கணம் நுதலி யெடுத்துக் கொள்ளப்பட்டதன்று, வேற்றுமையிலக்கணமே நுதலி யெழுந்ததெனவே படும் ; அதனால் அவர்க்கது கருத்தன் றென்க. அஃதேல் , `பெயர்நிலைக் கிளவி காலந் தோன்றா' (சொல் - 70) எனப் பெயரிலக்கணம் ஈண்டுக் கூறியது என்னையெனின் : - பயனிலைகோடலும் உருபேற்றலும் பெயரிலக்கணமென்பது ஈண்டுப் பெறப்பட்டமையான், அவற்றோடியையக் காலந்தோன்றாமையும் ஈண்டே கூறினார், பெயரிலக்கணமாத லொப்புமையானென்பது. வேற்றுமையாவன ஏழென்று சொல்லுவர் தொல்லாசிரியர் ; எ-று. செயப்படு பொருண் முதலாயினவாகப் பெயர்ப்பொருளை வேறு படுத்துணர்த்தலின், வேற்றுமையாயின. செயப்படுபொருண் முதலாயினவற்றின் வேறுபடுத்துப் பொருள் மாத்திர முணர்த்தலின் எழுவாயும் வேற்றுமையாயிற்று . அல்லதூஉம் , வேற்றுமையென்பது பன்மை பற்றிய வழக்கெனினுமமையும். தாமே யென்பது கட்டுரைச் சுவைபட நின்றது. (1)
1."வேற்றுமை...பொது விலக்கணமேயாம்" - இக் கூற்று அத்துணைப் பொருத்தமுடையதன்று. பெயரும் உருபும் ஓரளவு ஒன்றுபட்டு நிற்கும். வேற்றுமைப் பெயரில் உருபைப் பிரித்து வைத்து, இடைச்சொல்லெனக் கொள்ளின் , பெயர்களினும் வினைகளினும் இறுதியிலுள்ளபால்காட்டு மீறுகளையும் பிரித்துணர்ந்து இடைச் சொல்லெனக் கொள்ள வேண்டும் . விரவுப்பெயர்களும் மகடூஉ மருங்கிற்பாறிரி கிளவியும் பயனிலையோடு சேர்த்தல்லது. காட்டப்படாமையின், பயனிலை கூறல் பற்றி வேற்றுமையைப் பொதுவிலக்கணம் என்றலும் பொருந்தாது. 2. 69-வது நூற்பா. 3. 70-வது நூற்பா. 4. 69-வது நூற்பா.
|