பெயரும் பெயருந் தொக்க தொகையு முள ; அவையுமுரிய எழுவாய் வேற்றுமையாய்ப் பயனிலை கோடற்கு ; எ - று எ - டு: யானைக்கோடு கிடந்தது, மதிமுகம் வியர்த்தது. கொல் யானை நின்றது , கருங்குதிரை யோடிற்று , உவாப் பதினான்கு கழிந்தன , பொற்றொடி வந்தாள் என வரும் . பெயரினாகிய தொகையு மென்னும் உம்மையாற் , பெயரொடு பெயர் தொக்கனவே யன்றி, நிலங்கிடந்தான், மாக்கொணர்ந்தான் எனப் பெயரொடு வினை வந்து தொக்க வினையினாகிய தொகையுமுள என்பதாம் , ஆகவே பெயரொடு பெயரும் பெயரொடு தொழிலுந் தொக்கன தொகை யென்பது பெற்றாம் . அவ்வு முரிய எனப்பொதுவகையாற் கூறனாரேனும் , ஏற்புழிக் கோடலென்பதனான் எழுவாய் வேற்றுமையாதற் கேற்புடைய பெயரினாகிய தொகையே கொள்ளப்படும் . இரு தொடர்படச் சூத்திரத் திடர்ப்படுவ தென்னை? பெயரினாகிய தொகையும் எழுவாய் வேற்றுமையாமென்றோத அமையாதோ எனின் ;- அங்ஙனமோதின் பெயரொடு பெயரும் , பெயரொடு வினையுந் தொக்கன தொகைச் சொல்லா மென்னுந் தொகையிலக்கணம் பெறப்படாதாம் ;அவ் விலக்கண முணர்த்துதற்கு இவ்வாறு பிரித்தோதினா ரென்பது. பெயரினாகிய தொகையுமென்ற உம்மையான் வினையினாகிய வினைத்தொகை தழுவப்பட்ட தென்றும் , `எல்லாத் தொகையு மொருசொன்னடைய'(சொல் - 420) என்பதனால் தொகைச் சொல்லெல்லாம் எழுவாய் வேற்றுமையாதல் பெறப்படுதலின் , ஈண்டு அவ்வு முரிய அப்பாலான என்றது தொகைச் சொற்குப் பயனிலை கோடன் மாத்திர மெய்துவித்தற்கென்றும் ,உரையாசிரியர் கூறினாராதலின் : அற்றன்று : வினைத் தொகைக்கு நிலைமொழி வினையென்பது உரையாசிரியர்க்குக் கருத்தன்மை `வினையின் றொகுதி காலத் தியலும்'(சொல் - 415) என்னுஞ் சூத்திரத்திற் சொல்லுதும் இனி `எல்லாத் தொகையுமொருசொன்னடைய'(சொல் - 420) என்பதற்கு ஒரு சொன்னடையவா மென்ப தல்லது எழுவாய் வேற்றுமையாமென்னுங் கருத்தின்மையானும் . அக் கருத் துண்டாயின் அவையும் எழுவாய் வேற்றுமையாய் நின்று `அன்றி யனைத்தும் பெயர்ப்பயனிலையே'(சொல் - 66) என்றதனால் பயனிலை யெய்து மாகலின் அவ்வு முரிய அப்பா லான வென்றல் கூறியது கூறிற்றாமாகலானும் , அதுவுமுரையாசிரியர் கருத்தன் றென்க. அஃதேல் தொகையும் எழுவாய் வேற்றுமையா மென்பதே இச் சூத்திரத்திற்குக் கருத்தாயின் `எழுவாய் வேற்றுமை பெயர்தோன்று நிலையே' (சொல்-65) என்னுஞ் சூத்திரத் தின் பின் வைக்க எனின் ; - பெயர் தோன்றிய துணையாய் நிற்றலும் பயனிலை கோடலுமாகிய எழுவாய் வேற்றுமையிலக்கண மிரண்டுந் தொகைச் சொற்கு மெய்துவித்தற்கு அவ்விரண்டு சூத்திரத்திற்குப் பின் வைத்தாரென்பது. ஆண்டு வைப்பின் `அன்றி யனைத்தும் பெயர்ப்பய னிலையே' (சொல் - 66) என்றதனாற் பயனிலைகோடல் பெயர்க்கேயாய்த் தொகைக்கெய்தாதா மென்பது. (6)
|