2.வேற்றுமையியல்

3.இரண்டாம் வேற்றுமை

ஐ உருபின் பொருள்

711இரண்டாகுவதே
ஐயெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
யெவ்வழி வரினும் வினையே வினைக்குறிப்பு
அவ்விரு முதலில் தோன்றும் அதுவே.

`பெயர் ஐ ஒடு கு' என்னுஞ் சூத்திரத்து ஐ எனப்பெயர் பெற்ற வேற்றுமைச்சொல் இரண்டாவதாம் . அஃதியாண்டுவரினும் வினையும் வினைக்குறிப்புமாகிய அவ்விரண்டு முதற்கண்ணுந் தோன்றுமவை பொருளாக வரும்; எ - று.

எ - டு: குடத்தை வனைந்தான் , குழையையுடையன் என வரும் .

எண்ணுமுறையான் இரண்டாவதென்பது பெறப்படுமாயினும் , இக்குறி தொல்லாசிரியர் வழக்கென்ப தறிவித்தற்கு ஐயெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி யிரண்டாவ தென்றார் . இது மூன்றாவது முதலாயினவற்றிற்கு மொக்கும்.

பெயரிய என்பது பெயரென்பது முதலாக முடிந்ததோர் பெயரெச்சம்.

தம்மை யுணர்த்துவனவும் பெயரெனப்படுதலின் `ஐயெனப்பெயரிய' வென்றார்.

வினையே வினைக்குறிப் பென்றாராயினும் அவற்றின் செயப்படு பொருளே கொள்ளப்படும் ; அவ்விருமுதலிற் றோன்று மென்றமை யான் , முத2லாதற்கும் வேற்றுமை பொரு3ளாதற்கும் ஏற்பன அவையே யாகலின். என்னை அவை முதலாதற் கேற்றவாறெனின் ; - செய்யப்படுபொருள் முதலாயின தொழிற்குக் காரணமாகலானும் , `ஆயெட்டென்ப தொழின்முதனிலையே' (சொல் - 112) என அவற்றை முதனிலை யென்று கூறுபவாகலானு மென்பது. அஃதேல் , செயப்படு பொருளன்மையான் வினைக்குறிப்பெனல் வேண்டாவெனின்;- அற்றன்று ; `அம்முக்காலமுங் குறிப்பொடுங் கொள்ளு, மெய்ந்நிலையுடைய' (சொல் -200) என்றாராகலின் , குறிப்புச்சொற் காலமொடு தோன்றித் தொழிற்சொல்லாதலும் குழை முதலாயின தொழிற்பயனுறுதலும் ஆசிரியர் துணிபாகலின் , அவையுஞ் செயப்படுபொருளா மென்பது , ஆயின் , செயப்படு பொருட்கட் டோன்று மெனவமையும் , வினையே வினைக்குறிப் பெனல் வேண்டாவெனின் ;- அங்ஙனங் கூறின் , செயப்படு பொருளையே கூறினாரோ குறிப்புப் பொருளு மடங்கப் பொது வகையாற் கூறினாரோ வென் றையமாம்; ஐயம் நீங்க வினையே வினைக்குறிப் பென்றாரென்பது . வினை வினைக் குறிப்பு என்பன ஈண்டாகுபெயர்.

புகழை நிறுத்தான் ,புகழை நிறுத்தல் , புகழை யுடையான் , புகழையுடைமை என இரண்டாவது பெயரொடு தொடர்ந்தவழியும் வினைச் செயப்படுபொருளும் குறிப்புச் செயப்படுபொருளும் பற்றியே நிற்குமென்பார் , எவ்வழி வரினு மென்று யாப்புறுத்தார்.

இயற்றப்படுவதும் ,4 வேறுபடுக்கப்படுவதும்,5 எய்தப் படுவது6மெனச் செயப்படுபொருள் மூன்றாம். இயற்றுதலாவது முன்னில்லதனை யுண்டாக்குதல் . வேறுபடுத்தலாவது முன்னுள்ளதனைத் திரித்தல் . எய்தப்படுதலாவது இயற்றுதலும் வேறுபடுத்தலு மின்றித் தொழிற்பயனுறுந் துணையாய் நிற்றல்.

(10)

1. இந்நூற்பா முதல் ஏழாம் வேற்றுமை நூற்பா முடிய ஒவ்வொரு வேற்றுமைக்கும் ஒவ்வொரு நூற்பாவாகவே கொண்டு பொருள் கூறினர் , இளம்பூரணர் , [71 - ம் 72- ம் ஒருநூற்பாவே இளம்பூரணருக்கு.]

(உ-ம்)2. முதல் - தொழிற் காரணம்.

3. வேற்றுமைப் பொருள் - வேற்றுமை யேற்கும் பொருள்.

4. கோயிலைக் கட்டினான் , நூலை இயற்றினான் .

5. குடத்தை வனைந்தான் . கட்டிடத்தை இடித்தான்.

6. ஊரை அடைந்தான் , சோற்றை உண்டான்.