அதனின் இயறல் - மண்ணானியன்ற குடம் என்பது மண்முதற்காரணம். முதற்காரணமாவது காரியத் தோடொற்றுமையுடையது. அதன் தகு கிளவி-வாயாற்றக் கது வாய்ச்சி; அறிவானமைந்த சான்றோர் என்பன. இவை கருவிப்பாற்படும். அதன் வினைப்படுதல்- சாத்தனான் முடியுமிக்கருமம் என்பது இதுவினைமுதற்பாற்படும். அதனின் ஆதல் - வாணிகத்தானாயினான் என்பது, அதனின் கோடல் - கரண1த்தாற் கொண்டவரிசி என்பது. இவையுங் கருவிப் பாற்படும். இவையைந்து பொருளும் ஓடுவுருபிற்குஞ் சிறுபான்மைபற்றி யுரியவாயினும் , பெரும்பான்மைபற்றி ஆனுருபிற்கே யுரிய போலக் கூறினார். அதனொடு மயங்கல் - எண்ணொடு விராய வரிசி என்பது . அதனோடு இயைந்த ஒருவினைக் கிளவி - ஆசிரியனொடு வந்த மாணாக்கன் என்பது , வருதற்றொழில் இருவர்க்கு மொத்தலின் , ஒருவினைக் கிளவியாயிற்று. அதனோடு இயைந்த வேறுவினைக் கிளவி - மலையொடு பொருத மால்யானை என்பது , பொருதல் யானைக் கல்ல தின்மையின் வேறுவினைக் கிளவியாயிற்று. அதனோடு இயைந்த ஒப்பல் ஒப்புரை - பொன்னோடிரும்பனையர் நின்னொடு பிறரே என்பது ஒப்பல்லதனை யொப்பாகக் கூறலின் ஒப்பலொப்புரை யாயிற்று. இம் மூன்றற்கும் உடனிகழ்தல் பொது வென்பதூஉம் அவை ஒடுவெனுருபிற்கே யுரிய வென்பதூஉ முணர்த்திய , அதனோடியைதல் மூன்றற்குங் கூறினார். அதனொடு மயங்கற்கும் ஈதொக்கும். எல்லாப் பொருட்கண்ணும் அது வென்றது உருபேற்கும் பெயர்ப்பொருளை. `அதற்கு வினையுடைமையின்' (சொல் - 76) என்பதற்கும் ஈதொக்கும் . இன்னானேது என்பது முயற்சியிற் பிறத்தலானொலி நிலையாது என்பது , அதனினாதலெனக் காரக ஏது முற்கூறப்பட்டமையான் , இது ஞாபக ஏதுவாம் . இப்பொருள் ஆனுருபிற்கும் இன்னுருபிற்கு முரித்தென்பது விளக்கிய ஏது என்னாது இன்னானேது என்றார் . இன்னானென்பது உம்மைத் தொகை. அவற்றதேதுப் பொருண்மை; எ - று. என வென்பதனை மாற்றி ஏது வென்பதன் பின் கொடுத்து, ஈங்கு வரூஉ மன்ன பிறவுமென வியைக்க. ஈங்ஙனமென்று பாட மோதுவாருமுளர். அதனினியற லென்பதற்குத் தச்சன் செய்த சிறுமாவைய மென்றும் , இன்னானென்பதற்குக் கண்ணாற் கொத்தை காலான் முடவனென்றும் உதாரணங்காட்டினாரால் உரையாசிரியரெனின்;- அற்றன்று; தச்சன் செய்த சிறுமா வையமென்பது `வினைமுதல் கருவி யனை முதற்று' (சொல் - 73) என்புழி யடங்குதலான் ஈண்டும் பாற்படுக்க வேண்டாமையானும் , சினைவிகாரத்தை முதன் மேலேற்றிக் கூறும் பொருண்மை இன்னானென்பதனாற் பெறப்படாமையானும். அது போலியுரை யென்க. ஒடுவும் ஆனும் இரண்டு வேற்றுமை யாகற்பால வெனின்;- அற்றன்று ; வேற்றுமை மயக்கமாவது ஒரு வேற்று மையது ஒரு பொருட் கண்ணாக, சில பொருட் கண்ணாக ஏனை வேற்றுமையுஞ் சேறலன்றே; அவ்வாறன்றிச் சிறி தொழித்து எல்லாப் பொருட்கண்ணும் இரண்டுருபுஞ் சேறலானும், வடநூலுள் பொருள் வேற்றுமையல்லது உருபு வேற்றுமையான் ஒரு வேற்றுமையாக வோதப்படாமை யானும், ஈண்டெல்லாவாசிரியரும் ஒரு வேற்றுமையாகவே யோதினாரென்க. வடநூலொடு மாறுகொள்ளாமை கூறல் ஆசிரியர்க்கு மேள்கோளாயின் , விளிவேற்றுமையை எழுவாய் வேற்றுமைக்கண் அடக்கற்பாலராவர், அவ்வாறடக்கலில ரெனின் - அற்றன்று; விளிவேற்றுமையை எழுவாய் வேற்று மைக்கண் அடக்கல் ஆண்டு எல்லார்க்கும் ஒப்ப முடிந்ததன்று; ` ஏழியன் முறைய தெதிர்முக வேற்றுமை வேறென விளம்பான் பெயரது விகாரமென் றோதிய புலவனு முளனொரு வகையா னிந்திர னெட்டாம் வேற்றுமை யென்றனன்' என்பவாகலின் ஐந்திர நூலார் விளிவேற்றுமையை எட்டாம் வேற்றுமையாக நேர்ந்தாரென்பது பெறப்படும்; ஆசிரியர் அவர் மதம் பற்றிக் கூறினாராகலின் அதனொடு மாறு கொள்ளா தென்பது. இக் கருத்து விளக்கியவன்றே, பாயிரத்துள் ` ஐந்திர நிறைந்த தொல்காப்பியன் ' எனக் கூறிற் றென்க. அன்னபிறவு மென்றதனால், கண்ணாற்கொத்தை, தூங்கு கையானோங்கு நடைய ( புறம் - 22) மதியோ டொக்குமுகம், சூலொடு கழுதை பாரஞ் சுமந்தது என்பன போல்வன கொள்க. (13)
1.காணம்-பொற்காசு.
|