2.வேற்றுமையியல்

8.ஏழாம் வேற்றுமை

` கண் ' உருபின் பொருள்

81ஏழா குவதே
கண்ணெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
வினைசெய் இடத்1தின் நிலத்தின் காலத்தின்
அனைவகைக் குறிப்பின் தோன்றும் அதுவே.

கண்ணெனப் பெயர்கொடுத் தோதப்பட்ட வேற்றுமைச்சொல் ஏழாவதாம். அது வினைசெய்யா நிற்றலாகிய இடத்தின்கண்ணும், நிலமாகிய இடத்திண்கண்ணும், காலமாகிய இடத்தின் கண்ணுமென அம் மூவகைக் குறிப்பின் கண்ணுந் தோன்றும், எ - று.

எனவே, ஏழாவது இடப்பொருண்மைத் தென்றவாறாம்.

குறிப்பின் தோன்றுமது என்றது அவற்றை யிடமாகக் குறித்த வழி அவ்வேற்றுமை தோன்றுமென்றவாறு.

எனவே, இடமாகக் குறிக்கப்படாதவழி அப் பெயர்க்கண் வேற்றுமை தோன்றா தென்பதாம்.

தன்னின் முடித்த லென்பதனான் ஏனை வேற்றுமைச் சொற்களும் அவ்வப்பொருட்கண் குறிப்பில்வழி அவ்வப் பெயர்க்கண் வாராமை கொள்க.

எ - டு: தட்டுப் புடைக்கண் வந்தான் மாடத்தின் கணிருந்தான் கூதிர்க்கண் வந்தான் என வரும்.

(20)

1. வினைசெய் இடம் என்றது வினைநிகழ்ச்சியை. ஆகவே, வினை நிகழ்ச்சி வினைநிலம் வினைக்காலம் என இடம் மூன்றாம். எ- டு. போரின்கண், போர்க்களத்தின் கண், போர்க்காலத்தின்கண்."