2.வேற்றுமையியல்

8.ஏழாம் வேற்றுமை

` கண் ' உருபின் பொருள்

82கண்கால் புறமகம் உள்ளுழை கீழ்மேல்
பின்சார் அயல்புடை தேவகை1யெனாஅ
முன்னிடை கடைதலை வலமிட மெனாஅ
அன்ன பிறவும் அதன்பால என்மனார்.

கண் முதலாக இடமீறாகச் சொல்லப்பட்ட பத்தொன்பது பொருளும் அவை போல்வன பிறவும் ஏழாவதன்றிறத்தன; எ - று.

கண்ணென்னும் பொருளாவது `கண்ணின்று கூறுதலாற்றா னவனாயின்' (கலி-37) எனவும் , `கண்ணகன்ஞாலம்' எனவும் , கண்ணென்று மிடைச்சொல்லா னுணர்த்தப்படும் கால் புறமுகமுள்ளென்பன முரலாயினவற்றது பொருள் வேற்றுமை வழக்கு நோக்கி யுணர்ந்து கொள்க.

கண்ணின்று சொல்லியானை என்கண்ணின்றிவை சொல்லற்பாலையல்லை என்றும், ஊர்க்காற்செய்கை ஊர்கட்செய் என்றும் , ஊர்ப்புறத்து நின்ற மரத்தை ஊர்க்கண்மரம் என்றும் , எயிலகத்துப் புக்கானை எயிற்கட்புக்கான் என்றும் , இல்லுளிருந்தானை இற்கணிருந்தான் என்றும் , அரசனுழை யிருந்தானை அரசன் கணிருந்தான் என்றும் , ஆலின் கீழ்க் கிடந்த ஆவை ஆலின்கட் கிடந்தது என்றும் , மரத்தின் மேலிருந்த குரங்கை மரத்தின் கணிருந்தது என்றும் , ஏர்ப்பின் சென்றானை ஏர்க்கட் சென்றான் என்றான் என்றும் , காட்டுச் சாரோடுவதனைக் காட்டின்கணோடும் என்றும் , உறையூர்க் கயனின்ற சிராப்பள்ளிக் குன்றை உரையூர்க்கட்குன்று என்றும் , எயிற்புடை நின்றாரை எயிற்கண் நின்றார் என்றும் , வடபால்வேங்கடம் தென்பாற் குமரி என்பனவற்றை வடக்கண்வேங்கடம் தெற்கட்குமரி என்றும் , புலிமுன்பட்டானைப் புலிக்கட்பட்டான் என்றும் , நூலினிடையுங் கடையுந் தலைதுநின்ற மங்கலத்தை நூற்கண்மங்கலம் என்றும் , கைவலத்துள்ளதனைத் கைக்கணுள்ளது என்றும்,தன்னிடத்து நிகழ்வதனைத் தன்கண் நிகழ்வது என்றும் அவ்விடப் பொருள் பற்றி ஏழாம் வேற்றுமை வந்தவாறு கண்டுகொள்க.

எனா அவென்பது எண்ணிடைச்சொல்.

கண்முதலாயினவெல்லாம் உருபென்றாரால் உரையாசிரியரெனின் :- உருபாயின் , ஏழாவதற்குக் கண்ணென்பது உருபாதல் மேலே பெறப்பட்டமையாற் பெயர்த்துங் கண்காலென்றல் கூறியது கூறிற்றாமாகலானும் ஊர்ப்புறத்திருந்தான் , ஊரகத்திருந்தான் , கைவலத்துள்ளது கொடுக்கும் எனப்புறம் அகம் வலமென்பனவற்றுவழி அத்துச்சாரியை கொடுத்து உதாரணங் காட்டினமையானும் , அவர்க்கது கருத்தன்றென்க.2 உருபல்லவேல், என்னுழை , என்முன் என நிலைமொழி உருபிற்கோதிய செய்கை பெற்றவாறென்னையெனின்:- `அதற்பொருட்டாகலின் ' (சொல்-76) எனவும் `தம்முடைய தண்ணளியுந் தாமும் ' எனவும் உருபின் பொருள்பட வரும். பிறமொழி வந்துழியும் நிலைமொழி அச்செய்கை பெற்று நிற்றலின் , அச்செய்கை உருபுபுணர்ச்சிக்கேயென்னும் யாப்புறவின் றென்க.

அன்னபிறவு மென்றதனால் , பொருட்கண் உணர்வு, எண்கண் அன்புடையன்,மலர்க்கண் நாற்றம் , ஆகாயத்துக்கட்பருந்து என்னுந் தொடக்கத்தன கொள்க.

(21)

1. தே=தேயம், இடம்.வகை=கூறு.தேவகை=தேயக்கூறு;இடக்கூறு.

2.`கண்கால்' முதலியன `பொருட்டு' `உடைய' என்பனபொலச் சொல்லுருபு என்பது சேனாவரையர் கருத்து.