3.வேற்றுமை மயங்கியல்

[வேற்றுமையுருபுகள் தம்முள் மயங்கிப் பொருள் வேறுபாடு கொள்ளும் இயல்புணர்த்துவது.]

1.வேற்றுமையுருபுகள் மயங்குதல்

சார்பு பொருளில்

84கருமம் அல்லாச் சார்பென் கிளவிக்கு
உரிமையு முடைத்தே கண்ணென் வேற்றுமை

மேற்கூறப்பட்ட வேற்றுமை தம்முள் மயங்குமா றுணர்த்திய எடுத்துக் கொண்டார்.அம் மயக்கம் இரு வகைப்படும்: பொருள் மயக்கமும், உருபு மயக்கமுமென. பொருள் மயக்கமாவது தன் பொருளில் தீராது பிறிதொன்றன் பொருட்கண் சேறல். உருபுமயக்கமாவது தன் பொருளிற்றீர்ந்து சேறல், `யாத னுருபிற் கூறிற் றாயினும்' (சொல்-10.6) என்பதனான் உருபு மயக்கமுணர்த்தினார்; அல்லனவற்றா னெல்லாம் பொருண் மயக்க முணர்த்தினான்; கமுணர்த்தினான்.இவ்விரு வகை மயக்கமுணர்த்துதலான், இவ்வோத்து வேற்றுமை மயங்கிய லென்னும் பெயர்த்தாயிற்று. மயக்கமே யன்றி வேற்றுமைக்கோதிய இலக்கணத்திற் பிறழ்ந்து வழீஇ யமைவனவும் பிறவும் இயல்புடை யன ஈண்டுணர்த்துதலான், இக்குறி பன்மை நோக்கிச் சென்ற குறியெனவுணர்க.

இரண்டாவதற்கோதப்பட்ட சார்பு பொருண்மை கருமச் சார்புங் கருமமல்லாச் சார்புமென இரண்டு வகைப்படும். அவற்றுள், கருமச் சார்பு தூணைச் சார்ந்தான் என ஒன்றனையொன்று மெய்யுறுதலாம். கருமமல்லாச் சார்பு மெய்யுறுதலன்றி அரசைச் சார்ந்தான் என வருவதாம். கருமமல்லாத சார்பு பொருண்மைக்கு உரித்தாய் வருவதலுமுடைத்து ஏழாவது. எ-று.

அரசர்கட் சார்ந்தான் என வரும்.

தருமமாவது ஈண்டு மெய்யுறுதலாயின், அரசர்கட் சார்ந்தான் என்புழி உறுதலின்மையிற் சார்பாமாறென்னை யெனின்:- தூண் பற்றாத ஒரு சாத்தன் சார்ந்தாற்போல அரசர் பற்றாக அச் சார்ந்தானொழுகுதலின் சார்பாயிற்றென்பது.

உம்மை எதிர்மறை.

தூணிண்கட் சார்ந்தான் எனக் கருமச்சார்ச்சிக் கண் ஏழாவது சென்றாற் படுமிழுக்கென்னையெனின்:- அன்னதோர் வழக்கின்மையே பிறிதில்லை யென்க. இக்காலத்து அவ்வாறு வழங்குபவாலெனின்:- கருமமல்லாச் சார்ச்சின்கண் வருமுருபைச் சார்தலொப்புமையாற் கருமச்சார்ச்சிக்கண்ணுங் கொடுத்து உலகத்தார் இடைத்தெரிவின்றி வழங்குகின்றாரெனவேபடும்; ஆசிரியர் கருமமல்லாச் சார்பென் கிளவியென விதந்து கூறினமையா னென்பது.

(1)

இடைத்தெரிவின்றி வழங்குதல் - இன்னவிடத்து இன்னவுருபு வருமென்று இடந்தெரியாது வழங்குதல்.