யிருப்பதாகத் திரு. கா. நமச்சிவாய முதலியார் அவர்கள் மூலம் தெரியினும், இதுகாறும் அவ்வுரை வெளிவந்திருப்பதாகவோ அன்றி ஏட்டுச் சுவடியில் இருப்பதாகவோகூடத் தெரியவில்லை. இவையன்றிச் சொல்லதிகாரத்திற்கு ‘56 ஆம் நம்பர் ஏட்டுரை’ என்ற ஒன்றும் இருப்பதாகவும், அவ்வுரை கிளவியாக்கம் முதல் வேற்றுமை மயங்கியலில் சில நூற்பாக்கள்வரையுள்ளதாகவும், அது சென்னை ஓரியண்டல் கையெழுத்து நூல்நிலையத்தில் இருப்பதாகவும் திரு. பி. சா. சுப்பிரமணிய சாத்திரி அவர்கள் கூறியுள்ளார். அவ்வுரையையும் சொல்லதிகாரத்திற்குள்ள மற்ற உரைகளையும் சேர்த்துத் ‘தொல்காப்பியச் சொல்லதிகார உரைக்கோவை” என்ற பெயரில் திருவனந்தபுரம் பல்கலைக்கழகப் பேராசிரியர்களான திருவாளர்கள் ஆபிரகாம் அருளப்பன் அவர்களும், வி. ஐ. சுப்பிரமணியம் அவர்களும் பதிப்பித்துள்ளனர். இன்னும் திரு இரா. வேங்கடராஜுலு ரெட்டியார் அவர்கள் ‘ஆசிரியர் பெயர் தெரியாத பழைய உரை ஒன்றுண்டு’ என்றும், ‘அது உரியியல் முடியக்கிடைத்துள்ளது என்றும், ‘சென்னைச் சர்வகலாசாலைப் பதிப்பாய் வெளிவரும் என்றும் 1940இல் தாம் எழுதிய ‘வியங்கோள்’ என்ற கட்டுரையில்குறித்துள்ளார், அவ்வுரை இதுகாறும் வெளிவந்திலது. இவ்வுரையாசிரியர்களில் சொல்லதிகாரத்திற்கு மட்டுமே உரை செய்தவர்கள் சேனாவரையர், தெய்வச்சிலையார், கல்லாடர் ஆகிய மூவரும் ஆவர். இம்மூன்றுரைகளில் சேனாவரையர் உரை நம் கழகவழி ஆறுமுறை பதிப்பிக்கப்பட்டுள்ளது. தெய்வச்சிலையார் உரை இதுவே முதன்முறையாகக் கழகவழி வெளிவருகின்றது. கல்லாடர் உரையும் இதனையடுத்து வெளிவர இருக்கின்றது.
2. தெய்வச்சிலையார் : (1) தொல்காப்பியத்தை அருளிய தொல்காப்பியருடைய வாழ்க்கை வரலாறு ஒன்றும் செவ்விதின் தெரியாதது போலவே, இவரைப்பற்றிய வாழ்க்கை வரலாறும் ஒன்றும் தெரிந்திலது. இக்குறை நம் பண்டைத் தமிழாசிரியர்கள் அனைவர்க்கும் ஒப்ப இருப்பதாகும். மேனாடுகளில் நூல்களில் கவனம் செலுத்துதல் போலவே, அவ்வந் நூல்களை யியற்றிய ஆசிரியன்மார்கள் மேலும் கவனம் செலுத்துவர். ஆனால் நம் நாட்டிலோ அப்பழக்கமில்லை. எவரேனும் தாமாக, அவர் இயற்றிய நூலின் கருத்து யாது? அது எத்துணைச் சீரியது? என்பதிலேயே நம்மவர்கள் கருத்துச் செலுத்தி வந்துள்ளனர். நூல்களையியற்றும் ஆசிரியர்களும் தம் வரலாற்றைத் தாமே எழுதி உரைக்கும் பழக்கத்தினரல்லர். இவ்வாற்றான் நம் பண்டைத் தமிழாசிரியர்கள் பலரின் வாழ்க்கை
|