[விளிமரபு]சொல்லதிகாரம் தெய்வச்சிலையார்77

77

உயர்திணைப் பெயருள் உயிரீறாகி விளியேற்கும் பெயரை
வகுத்து உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். உயர்திணை இடத்துள்ள பொருளைச் சுட்டிய விளியேற்கும் பெயர் இ, உ, ஐ, ஓ என்னும் ஈற்றினை யுடைய அக் கூற்று நான்கு, எ - று.

உயர்திணை மருங்கினுள்ள பொருள் சுட்டிய என்றமையான் உயர்திணைப் பெயரென வகுத்தோதப் படுவனவும், விரவுப் பெயருள் உயர்திணை குறித்தனவும் கொள்ளப்படும்.

(3)

இகர ஐகார ஈறுகள் விளியேற்குமாறு

118.

அவற்றுள்,
இ ஈ யாகும் ஐ ஆ யாகும்.

இகர ஐகார ஈற்றுப் பெயர் விளி ஏற்குமாறு உணர்த்துதல்
நுதலிற்று.

இ - ள். இகரம் ஈகாரமாய்த் திரிந்தும், ஐகாரம் ஆய் எனத் திரிந்தும் விளி ஏற்கும், எ - று.

எ - டு. நம்பி, சாத்தி என்பன நம்பீ, சாத்தீ என விளி யேற்கும். நங்கை நங்காய் எனவும், தந்தை தந்தாய் எனவும் வரும்.

(4)

ஓகாரமும் உகரமும் விளியேற்குமாறு

119.

1ஓவும் உவ்வும் ஏயொடு சிவணும்
உகரந் தானே குற்றிய லுகரம்.

உகர ஓகார ஈற்றுப் பெயர் விளி யேற்குமாறு உணர்த்துதல்
நுதலிற்று.

இ - ள். ஓகாரமும், உகரமும் ஏகாரம் பெற்று விளி யேற்கும்; ஆண்டுக் குற்றிய லுகரமே ஈறாகுவது, எ - று.

எ - டு. கோ, கோவே; வேந்து, வேந்தே என வரும், பிறவு மன்ன.

(5)

ஏனை உயிர் உயர்திணையில் விளியேலாமை

120.

ஏனை உயிரே உயர்திணை மருங்கில்
தாம்விளி கொள்ளா என்மனார் புலவர்.

ஐயந்தீர்த்தல் நுதலிற்று.

இ - ள். மேற் சொல்லப்பட்ட உயிரல்லாத உயிர்கள் உயர்திணையிடத்து வரின் விளி ஏலா, எ - று.


1. இதனை இரண்டு சூத்திரங்களாகக் கொள்வர் ஏனை யுரையாளர்.