உயர்திணையில் விளியேற்கும் புள்ளியீறுகள் 124. | னரலள வென்னு மந்நான் கென்ப புள்ளி இறுதி விளிகொள் பெயரே. |
உயர்திணைப் பெயருள் புள்ளியீறாகி விளிகொள்ளும் பெயர் வகுத்து உரைத்து உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். உயர்திணை மருங்கிற், புள்ளியீறாகி விளிகொள்ளும் பெயர் ன, ர, ல, ள என்னும் ஈற்றினை யுடைய அந்நான்கென்று சொல்லுவார் ஆசிரியர், எ - று. உயர்திணை என்பது அதிகாரத்தான் வந்தது. ன, ர, ல, ள என்பன ஆகுபெயராய் அவ் வீற்றினை யுடைய பெயர்க்குப் பெயராயின. உதாரணம் தத்தம் சிறப்புச் சூத்திரத்துட் காட்டுதும். (10) ஏனைப் புள்ளியீ றுகள் உயர்திணையில் விளி ஏலா எனல் 125. | ஏனைப் புள்ளி யீறுவிளி கொள்ளா. |
ஐயமறுத்தலை நுதலிற்று. இ - ள். உயர்திணைப் பொருட்கண் மேற் சொல்லப்பட்ட நான்கீற்றுப் பெயரும் ஒழிய, ஏனையீற்றுப் பெயர்கள் விளியேலா, எ - று. எ - டு. அவை:--யான், யாம், நாம், எல்லோரும், எல்லீரும், எல்லாம், தாம் என்பன. (11) னகர ஈறு விளியேற்குமாறு 126. | அவற்றுள், அன்னெ னிறுதி ஆவா கும்மே. |
நிறுத்த முறையானே னகர ஈறு விளியேற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். மேற் சொல்லப்பட்டவற்றுள், அன் என்னு மீற்றினையுடைய பெயர் ஆ என விளி ஏற்கும், எ - று. ஈறென்பது ஈற்றினையுடைய பெயரை. எ - டு. சோழன், சோழா; வெற்பன், வெற்பா; சாத்தன், சாத்தா எனவரும். (12) னகர ஈறு அண்மை விளியில் அகரமாதல் 127. | அண்மைச் சொல்லிற் ககர மாகும். |
எய்தியது விலக்கி மேலதற்கோர் புறநடை உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். அன் என்னுமீறு அண்மைக்கண் அகரமாகி விளியேற்கும், எ - று.
|