ஆராய்ச்சி முன்னுரை11

11

வரலாறு இன்னதென்றே தெரிய இயலாததாயிற்று. இதற்குச் சிறிது விதிவிலக்காகத் தொல்காப்பிய உரையாசிரியர்களில் நச்சினார்க்கினியர் மட்டுமே தமது ஊரையும், கோத்திரத்தையு மேனும் குறித்துச் சென்றனர். பிறர் அந்நிலைகூட இல்லை. நம் பண்டைச் சான்றோர்கள் அனைவரும், தம் பெருமை தாமறியாத் தன்மையராய் வாழ்ந்தனர் என்று சொல்லி மகிழ்வதல்லது வேறு யாது கூற இயலும்!

எனினும் இவருடைய உரையிலிருந்து இவருடைய சமயம், காலம், புலமைநலம் முதலியன அறிதற்கியலுகின்றன. அவற்றைப் பற்றி ஒரு சிறிது ஆராய்வாம்.

தெய்வச்சிலையார் என்ற பெயர் நம் தமிழ் நாட்டில் பலருக்கு இருந்ததெனக் கல் வெட்டுக்கள் மூலம் தெரிகிறது. ‘அரையன் தெய்வச்சிலையான் எடுத்த கையழகியான்’ எனவும், ‘விக்கிரம பாண்டியக் காலிங்கராயரான தெய்வச்சிலைப் பெருமான்’ எனவும் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன. சிலை என்பது கல் அல்லது மலை என்ற பொருளைக் குறிக்கும். தெய்வச்சிலை என்பது தெய்வத் தன்மை பொருந்திய மலை என்ற பொருளைக் குறிக்கும். இறைவன் எழுந்தருளியிருப்பது கைலைமலையாதலின், அம்மலையின் நினைவாகத் தெய்வச்சிலை என்ற பெயர் வைத்துள்ளனரோ என ஓர்ந்து உள்ளவும் இடனுண்டு. எனினும் இங்ஙனம் கூறுவதெல்லாம் ஆராய்தற்குரியதேயாம்.

(2) சமயம்: (அ) ‘மன்னாப் பொருளும் அன்ன இயற்றே’ என்ற நூற்பாவிற்கு உரை தருங்கால், பிறர் உரையினின்றும் முற்றிலும் மாறுபட்ட உரைதந்து அதற்குத் தக்க எடுத்துக் காட்டும் காட்டுகின்றார். இவ்வுரையாசிரியர். அவ்வுரையும் எடுத்துக் காட்டும் வருமாறு:-

பொருந்தும் பொருளும், பொருந்தாப் பொருளும், உறழ வேண்டும் இடத்தும், பொருந்தும் பொருள் கூறுமிடத்தும் உம்மை கொடுத்துச் சொல்ல வேண்டும்.

(எ - டு.) வேதாகமத் துணிவு ஒருவர்க்கு உணர்த்துமிடத்து உலகும் உயிரும் பரமும் அனாதி, பதியும் பசுவும் பாசமும் அனாதி என வரும். உலகும் உயிரும் பரமும் பசுவும் பொருந்தும் பொருள் ஆனவாறும், பாசமும் பதியும் இவற்றொடு பொருந்தாத பொருள் ஆனவாறும் காண்க.

பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருளுண்மையைக் கூறுவதும் அவற்றை அனாதி என்றுரைப்பதும் சைவ சித்தாந்தத்துள் காணும் பேருண்மையாகும்.