பல்லோர்க் குறித்த திணைநிலைப் பெயராவது திணைபற்றிவரும் பன்மைப் பெயர். குறிஞ்சிக் கண்ணியர் குவளை பூண்டு--வெற்பராடும் வெற்புச்சே ரிருக்கை என்றவழி உயர்திணைப் பெயராகிப் பன்மைகுறித்து வந்தது. வெற்பன், மலையன், நாடன் என ஒருமை குறித்து வருவன உளவாலெனின், அவை அந்நிலத்துத் தலைமகனைக் குறிக்கில் உடைப் பெயராம். அந்நிலத்துள்ள மாந்தரைக் குறிக்கில் இருதிணைக்கும் பொதுவாம். வெட்சியார், கரந்தையார் என்பனவும் அவை. வெட்சியான், கரந்தையான் என வாராதோ எனின்; அவ்வாறு வழக்கு வரின், அத்திரளின் உள்ளான் என்னும் பொருள்பட வரினல்லது நிரைகோடல், நிரை மீட்டல், எடுத்து விடுத்தல் என்பன ஒருவனாற் செய்யப்படாமையானும், வெட்சியாள், கரந்தையாள் எனப் பெண்பால் உணரவரும் வழக்கின்மையானும் திணையாற் பெறும் பெயர் பன்மைகுறித்து வருதல் பெரும்பான்மை என்று கொள்க. சிறுபான்மை ஒருமை குறித்துவரின், அன்னபிறவாற் கொள்ளப்படும். கூடிவரு வழக்கி னாடியற் பெயராவது கூடியியலும் வழக்கின் வழங்கும் இயற்பெயர் என்றவாறு. இயற் பெயராவது ஒரு பொருட்கு இடு குறியாகிய பெயர். அஃது இருதிணைக்கும் உரித்தாதலின் விரவுப் பெயரென வேறெடுத்து ஓதினார். ஈண்டு அப் பெயருடையார் பலரை ஒரு வினையாற் சொல்லுங் காலத்துச் சொல் தொகுத்துக் கூற வேண்டுதலின் ஈண்டு ஓதப்பட்டது. சாத்தன் என்னும் பெயருடையார் இருவர் மூவர் சேரவந்தவழிச் சாத்தன் வந்தான் சாத்தன் வந்தான் எனத் தனித் தனி கூறின் பொருள் வேற்றுமை உணர்த்தாது. ஒரு பொருளை இருகாற் சொன்னாற் போலப்படும். ஆண்டுச் சாத்தன்மார் வந்தார், சாத்திமார் வந்தார் எனக் கூறுதல் வேண்டுதலானும், அப்பொருள் உயர்திணை ஆதலானும் ஈண்டு ஓதப்பட்டது. இன்றிவ ரென்னும் எண்ணியற் பெயராவது இத்துணைவர் என எண்ணினான் இயன்ற பெயர். ஒருத்தி, ஒருவன், இருவர், மூவர் என்பன. (11) உயர்திணைப் பெயர்கட்குப் புறநடை 162. | அன்ன பிறவும் உயர்திணை மருங்கில் பன்மையும் ஒருமையும் பாலறி வந்த என்ன பெயரும் அத்திணை யவ்வே. |
உயர்திணைப் பெயர் புறநடைவகையான் உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். மேல் எடுத்து ஓதப்பட்டன போல்வன பிறவும், உயர்திணைப் பொருளிடத்து ஒருமை பன்மை எனப் பால்விளங்க வரும் எல்லாப் பெயரும் உயர்திணையிடத்த, எ - று. எ - டு. பெண்டிர், பெண்டுகள் என்பனவும், அத்தன்மையர், அத்தன்மையார் எனவும், ஏனாதி, அமைச்சன், படைத்தலைவன் எனச் சிறப்புப் பற்றி வரும் பெயரும், நாயன், நாச்சி எனத் தலைமைபற்றி, வரும் பெயரும், அடியான், அடியாள் என இழிபுபற்றி வரும் பெயரும், ஆசிரியன், புலவன் எனக் கல்விபற்றி வரும் பெயரும், குழலன், குழலாள், இடையாள், தோளாள் என உறுப்புப்பற்றி வரும் பெயரும், ஆதிரையான், ஓணத்தான்.
|