| “செய்வினையும் செய்வானும் அதன்பயனும் கொடுப்பானும் மெய்வகையால் நான்காகும் விதித்தபொருள் எனக்கொண்டே இவ்வியல்பு சைவநெறி யல்லவற்றுக் கில்லையென உய்வகையால் பொருள்சிவன்என் றருளினால் உணர்ந்தறிந்தார்” |
என்னும் சேக்கிழார் வாக்கும், | “ஏகன் அனேகன் இருள்கருமம் மாயைஇரண்டு ஆகஇவை ஆறுஆதி யில்” |
என்னும் உமாபதிசிவத்தின் வாக்கும் இவ்வுண்மையை நன்கு விளக்கும். (ஆ) ‘மந்திரப் பொருள்வயின் ஆஅகுநவும்’ என்ற பகுதிக்குச் சேனாவரையரும், நச்சினார்க்கினியரும் மந்திரம் வல்லார் வாய்க் கேட்டுணர்க என்றுரைக்கவும், இளம்பூரணர் தீமை பயக்கும் மந்திரப் பொருளை எடுத்துக்காட்டாகக் காட்டவும் இவ்வுரையாசிரியர் மட்டும் ‘நமசிவாய’ என்னும் திருவைந்தெழுத்தைக் குறிப்பால் காட்டும் பாடலைக் காட்டுகிறார். இங்ஙனம் சைவசமய நெறிக்கே உரிய முப்பொருளுண்மையையும், இருவினைப்பாசமும் மலக்கல் ஆர்த்திட வருபவக்கடலில் வீழ்மாக்கள் ஏறிட அருளும் மெய் அஞ்செழுத்தையும் இவர் கூறுவதால், இவர் சைவ சமயத்தைச் சார்ந்தவர் என்பது தெள்ளிதின் புலனாகும். (3) காலம்: தொல்காப்பிய உரையாசிரியர்கள் அறுவரில் முதல் உரையாசிரியராகிய இளம்பூரணர் காலம் கி. பி. 12 ஆம் நூற்றாண்டாகும். பேராசிரியரும் இந் நூற்றாண்டின் இறுதியில் இருந்தவரேயாவர். இவரை யடுத்துச் சேனாவரையரும், அவரை யடுத்து நச்சினார்க்கினியரும் வாழ்ந்தனர் என்பது அவர்கள் உரைகளால் அறியக்கிடக்கின்றது. சேனாவரையர் 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர் ஆவர். நச்சினார்க்கினியரும் இவரையடுத்து வாழ்ந்தவராவர். சேனாவரையரும், நச்சினார்க்கினியரும் தமக்கு முன்னுள்ளோர் கருத்துக்களை ஏற்பினும் அல்லது மறுப்பினும் அவரவர்களின் பெயர்களைக் கூறிச் செல்லும் இயல்பினர். தெய்வச்சிலையார் இவ் விருவர் காலத்திற்கும் முன்னர் இருந்திருப்பின், இவர்தம் கருத்தினை ஏற்பினும் அன்றி மறுப்பினும் இவர் பெயரை அவர்கள் குறித்துச் சென்றிருப்பர். அவர்கள் இருவரும் அங்ஙனம் கூறாமையின், அவர்கள் காலத்திற்கும் பிற்பட்டவர் தெய்வச்சிலையார் என அறியலாம்.
|