எண்ணப்படும் பொருண்மேல் வருவனவும், எண்ணுப் பெயராம்; எண்ணின் பெயரும் எண்ணும் பெயராம். நீ தந்த காணம் ஆயிரம் என்றவழி, எண்ணப்பட்ட பொருண்மேல் வந்தது. நாலிரண் டெட்டு என்றவழி எண்ணின்மேல் வந்தது. ஒப்பினாகிய பெயர்நிலை என்பது ஒப்புப் பற்றி வருவது பொன் போல்வது, பொன்னனையது, யானைப்போலி என்பன. அப்பால் ஒன்பதும் அவற்றோரன்ன என்பது அக்கூற்று ஒன்பது பெயரும் அஃறிணைப் பாலறி சொல்லாம் என்றவாறு. (14) இதுவும் அது. 165. | கள்ளொடு சிவணும் அவ்வியற் பெயரே கொள்வழி உடைய பலவறி சொற்கே. |
இதுவும் அது. இ - ள். கள் என்னுஞ் சொல்லோடு சிவணிய அவ் வஃறிணைப் பொருண்மேல் வரும் இயற்பெயர் பலவறி சொற்குக் கொள்ளும் இடனுடைய, எ - று. என்றமையாற் சிவணாத இயற்பெயர் பால் விளங்காது என்றவாறாம். ஆக்கள், தெங்குகள் எனவரும். (15) அஃறிணைப் பெயர்கட்குப் புறநடை 166. | அன்ன பிறவும் அஃறிணை மருங்கில் பன்மையும் ஒருமையும் பாலறி வந்த என்ன பெயரும் அத்திணை யவ்வே. |
அஃறிணைப் பெயர்க்கெல்லாம் புறநடை உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். மேற்சொல்லப்பட்டன போல்வன பிறவுமாகி அஃறிணைப் பொருட்கண் பன்மையும் ஒருமையுமாகிப் பால் விளங்க வந்த எல்லாப் பெயரும் அஃறிணை யிடத்த, எ - று. எ - டு. உள்ளது, இல்லது, பிறிது, பிற, அத்தன்மையது, அத்தன்மைய. இவையும் இவை போல்வனவும். (16) அஃறிணைப் பெயர் பாலுணருமாறு 167. | தெரிநிலை யுடைய அஃறிணை இயற்பெயர் ஒருமையும் பன்மையும் வினையொடு வரினே. |
மேற் பால் விளங்குவன கூறினார். இனிப் பால் விளங்காத அஃறிணை இயற்பெயர் பாலுணர்த்துமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். அஃறிணைப் பொருண்மேல் வரும் இயற் பெயர் ஒருமையும், பன்மையும் தெரிநிலை யுடையவாம் வினையொடுவரின், எ - று. அல்லது பால் விளங்கா என்றவாறு.
|