எ - டு. யானை வந்தது, தலை முடித்தது, தூங்கல் வந்தது என அஃறிணை ஒருமை ஆயின. யானை வந்தன, தலை முடித்தன, தூங்கல் வந்தன; இவை அஃறிணைப் பன்மை உணர்த்தின. யானை வந்தான், தலை முடித்தான், தூங்கல் வந்தான் என உயர்திணை ஆண்பாலாயின. யானை வந்தாள். தலை முடித்தாள், தூங்கல் வந்தாள் என உயர்திணைப் பெண்பால் ஆயின. (28) ஒருமை சுட்டிய பெயர் 179. | ஒருமை சுட்டிய எல்லாப் பெயரும் ஒன்றற்கும் ஒருவர்க்கும் ஒன்றிய நிலையே. |
ஒருமை குறித்த பெயர் திணை உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். ஒருமையைக் குறித்த எல்லாப் பெயரும் அஃறிணை ஒருமைக்கும், உயர்திணை ஆண்பாற்கும் பெண்பாற்கும் ஒத்த நிலைமைய, எ - று. எ - டு. கோதை வந்தது, கையிழந்தது, செவியிலி வந்தது என அஃறிணை ஒருமை உணர்த்தின. கோதை வந்தாள், கையிழந்தாள், செவியிலி வந்தாள் என உயர்திணைப் பெண்பாலாயின. கோதை வந்தான். கையிழந்தான். செவியிலி வந்தான் என உயர்திணை ஆண்பால் உணர்த்தின. கையிழந்தன என அஃறிணைப் பன்மையும் உணர்த்துமாலெனின், அவ்வாறு வருவன சினை வினையுங் காட்டும். திரிபின்றி வரும் உதாரணம் வந்தவழிக் கண்டு கொள்க. (29) தாம் என்னும் விரவுப் பெயர் 180. | தாமென் கிளவி பன்மைக் குரித்தே. |
தாம் என்னும் சொல் திணை உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். தாம் என்பது இருதிணைப் பன்மைக்கும் உரித்து, எ - று. எ - டு. தாம் வந்தார் என உயர்திணை ஆயிற்று. தாம் வந்தன என அஃறிணை ஆயிற்று. (30) தான் என்னும் விரவுப் பெயர் 181. | தான்என் கிளவி ஒருமைக் குரித்தே. |
தான் என்னுஞ் சொல் திணை உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். தான் என்னும் சொல் இருதிணைக்கண்ணும் ஒருமைக்கு உரித்து, எ - று. எ - டு. தான் வந்தான், தான் வந்தாள் என உயர்திணை ஒருமை உணர்த்திற்று. தான் வந்தது என அஃறிணை ஒருமை உணர்த்திற்று. (31)
|