எ - டு. | 1‘வில்லோன் காலன கழலே தொடியோள் மெல்லடி மேலவும் சிலம்பே நல்லோர் யார்கொல் அளியர் தாமே’ |
என்ற வழி, வில்லான், தொடியாள், நல்லார் என்பன ஓகாரம் பெற்று வந்தன. உம்மை எச்ச உம்மை யாகலான் அகரம் ஓகாரமாகத் திரியும் பெயரும் உள என்றவாறு, கிழவன் கிழவள் என்பன 2நாடு கிழவோன், கிழவோடேத்து எனவும் வரும். அஃறிணைப் பொருட்கண்ணும் இவ்வாறு வருவன அறிந்து கொள்க. (39) விரவுப் பெயர் செய்யுளுள் வரும் முறைமை 190. | இறைச்சிப் பொருள்வயின் செய்யுளுள் கிளக்கும் இயற்பெயர்க் கிளவி உயர்திணை சுட்டா நிலத்துவழி மருங்கில் தோன்ற லான. |
ஒருசார் இயற் பெயர்க்கு உரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. எய்தியது விலக்கியதுமாம். இ - ள். இறைச்சிப் பொருள் என்பது செய்யுளுள் உரைக்கப்படுகின்ற பொருட்புறத்ததாகிய கருப்பொருள். அஃதாவது மாவும், புள்ளும் மரமும் முதலாயின. அவற்றின்மேல் இடுகுறியாகி வரும் இயற்பெயர். அவற்றின்கண் செய்யுளுள் கிளக்கும் இயற் பெயர்ச்சொல் உயர்திணைப் பொருண்மையைச் சுட்டா: நிலத்து வழித் தோன்றலான், எ - று. வழியும், மருங்கும் ஒரு பொருட்கண் இருசொல் பிரிவின்றி வந்தன. என்பது என் சொன்னவாறெனின், இயற்பெயர் என்பதனை இருதிணைக்கும் பொதுவென ஓதினாராயினும், செய்யுளகத்துக் கருப்பொருள் ஆகி, நிலத்துவழித் தோன்றும் மாவும் புள்ளும், மரமும் முதலாயினவற்றின்மேல் இடுகுறியாகி வரும் இயற்பெயர், அஃறிணைப் பொருண்மையைச் சுட்டுமதல்லது உயர்திணைப் பொருண்மையைச் சுட்டா என எய்தியது விலக்கியவாறாயிற்று. செய்யுளகத்து இறைச்சிப் பொருட்கண் தோன்றும் இயற்பெயரென ஓதல் வேண்டியது அஃறிணைப் பொருட்கண் சாத்தன் கொற்றன் எனவரும் இயற்பெயர் வழக்கின்கண் என்பதூஉம் செய்யுட்கண் பொருட்பெயராகிய நிலத்து வழித்தோன்றும் பெயரே கூறுதல் வேண்டும் என்பதூஉம் அறிவித்தற் கெனக் கொள்க. அவையாவன: மான், மரை, முயல், நாரை, அன்றில், புன்னை, ஞாழல் என்பன. (40)
1. குறு-7. 2. பொருந-248.
|