110தொல்காப்பியம்[வினையியல்]

110

குறிப்பொடும் கொள்ளும் பொருள் நிலைமையை உடைய தோன்று நெறிக்கண், எ - று.

உம்மை எச்சவும்மை. எனவே, காலந்தோற்ற நில்லாது குறித்துக் கொள்ளப்படும் வினைச்சொல்லும் உள என்றவாறாம்.

எ - டு. உடையன் என்பது முன்பு உடையன், இப்போது உடையன், பின்பு உடையன் என மூன்று காலத்திற்கும் வடிவு வேற்றுமைப்பட நில்லாமையின், காலம் குறித்துக் கொள்ளப்பட்டது.

(3)

வினைச் சொற்களின் பாகுபாடு

195.குறிப்பினும் வினையினும் நெறிப்படத் தோன்றிக்
காலமொடு வரூஉம் வினைச்சொல் எல்லாம்
உயர்திணைக் குரிமையும் அஃறிணைக் குரிமையும்
ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமையும்
அம்மூ வுருபின தோன்ற லாறே.

மேற்கூறப்பட்ட வினையும் வினைக் குறிப்பும் தொகைநிலை
வகையாற் பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். காலங் குறிக்கப்படும் பொருண்மையினும், தொழிற் பொருண்மையினும் நெறிப்படத் தோன்றிக் காலத்தோடு வரூஉம் வினைச் சொல் எல்லாம் உயர்திணைப் பொருட்கு உரிமைய வாகியும், அஃறிணைப் பொருட்கு உரிமைய வாகியும், அவ்விருதிணைப் பொருட்கும் ஒத்த உரிமைய வாகியும் மூன்று வேறுபாட்டான் வரும், புலப்படும் இடத்து. எ - று.

அவற்றுள் உயர்திணைவினை - தெரிநிலைவினை, குறிப்புவினை என இருவகைப்படும். அவற்றுள் தெரிநிலைவினை - தன்மைவினை, முன்னிலை வினை, படர்க்கைவினை என மூன்றுவகைப்படும். அவற்றுள் தன்மைவினை உளப்பாட்டுத்தன்மை, தனித்தன்மை என இருவகைப்படும். முன்னிலை வினை ஒருமைவினை, பன்மைவினை என இருவகைப்படும். படர்க்கை வினை ஆடூஉவினை, மகடூஉவினை, பன்மைவினை என மூவகைப்படும். குறிப்பு வினையும் அவ்வாறே வரும். அவற்றுள் முன்னிலைவினை இரு திணைக்கும் பொதுவாகலின், அது விரவுவினைக்கண் கூறப்படும். ஏனைய ஈண்டுக் கூறப்படுகின்றன. அஃதேல், இடம்மூன்று என்பது எற்றாற் பெறுதும் எனின், எச்ச வியலுட் பெறுதும்.

(4)

உயர்திணைத் தன்மைப் பன்மை வினைமுற்று

196.அம்ஆம் எம்ஏம் என்னுங் கிளவியும்
உம்மொடு வரூஉம் கடதற என்னும்
அந்நாற் கிளவியொ டாயெண் கிளவியும்
பன்மை உரைக்கும் தன்மைச் சொல்லே.