[வினையியல்]சொல்லதிகாரம் தெய்வச்சிலையார்111

111

நிறுத்தமுறையானே உயர்திணைவினை உணர்த்துவான் எடுத்துக் கொண்டார்; அவற்றுள், உளப்பாட்டுத் தன்மைவினை உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். அம் முதலாக ஓதப்பட்ட எட்டீற்றினையு முடைய சொல் உயர்திணைப் பொருட்கண் தன்னோடு கூடிய பன்மைவினை உரைக்கும் சொல்லாம். எ - று.

உயர்திணை என்பது ‘முன்னுறக் கிளந்த உயர்திணை யவ்வே’ என்பதினின்றும் தந்துரைக்கப்பட்டது. வினை என்பது மேலைச் சூத்திரத் தினின்றும் தந்துரைக்கப்பட்டது. மேற் காலமொடு வரூஉம் வினைச் சொல் என்று ஓதி, ஈண்டுப் பாலுணர்த்தும் சொற்களை ஓதினமையான், வினைச்சொல் நிலைமை மூவகையாம் என்று கொள்ளப்படும்: தொழில் உணர்த்துதலும், காலங்காட்டலும், பால்காட்டலும் என.

எ - டு. உண்டனம், உண்கின்றனம், உண்பம் என்றவழி, உண் என்பது தொழில் உணர்த்திற்று, டு, கின்று, பு என்பன காலங்காட்டின். அன் சாரியை ஆகிநின்றது. அம் பாலுணர்த்திற்று. பிறவும் இவ்வாறாம் என்பது அறிந்து கொள்க. உண்டனம், உண்டாம், உண்டனெம், உண்டேம் இவை இறந்தகாலம் பற்றி வந்தன. உண்கின்றனம், உண்கின்றாம், உணகின்றனெம், உண்கின்றேம் இவை நிகழ்காலம் பற்றி வந்தன. உண்பம், உண்பாம், உண்பெம், உண்பேம் இவை எதிர்காலம் பற்றிவந்தன. உண்கும், உண்டும், வருதும். சேறும் என்பன எதிர்காலங் குறித்துழி, எதிர்காலத்திற்கு ஏற்கும், நிகழ்காலம் குறித்துழி நிகழ் காலத்திற்கு ஏற்கும். அம் ஆம் என்பன ஈற்றெழுத்து ஓதினமையான் உடம்பாட்டின் வருதலேயன்றி, மறையினும் வரப்பெறும் என்று கொள்க. உண்ணலம், உண்ணாம், உண்ணலெம், உண்ணேம் என வரும். இவ்வுரை மேல் வருவனவற்றிற்கும் ஒக்கும்.

(5)

உயர்திணைத் தன்மை ஒருமை வினைமுற்று

197.கடதற என்னும்
அந்நான் கூர்ந்த குன்றிய லுகரமோ(டு)
என் ஏன் அல் என வரூஉம் ஏழும்
தன்வினை உரைக்கும் தன்மைச் சொல்லே.

தனித் தன்மை வினை உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். க, ட, த, ற என்னும் அந் நான்கு எழுத்தினையும் ஊர்ந்த குற்றியலுகரத்தோடேகூட என் ஏன் அல் என வரூஉம் ஏழு ஈறும் தன்வினை உரைக்கும் தன்மைச் சொல்லாம், எ - று.

தன்வினை உரைக்கும் சொல் என்னாது தன்மைச் சொல் என்றது தன்வினையைத் தானே உரைக்கும் சொல் என்று கொள்க.

எ - டு. உண்கு, உண்டு, வந்து, சென்று எனவும்; உண்டனென், உண்ணாநின்றனென், உண்குவென்; உண்டேன், உண்கின்றேன், உண்பேன்; உண்பல் எனவும்; உண்ணலென், உண்ணேன் எனவும் வரும்.

(6)