112தொல்காப்பியம்[வினையியல்]

112

செய்கு என்னும் சொல் வினையொடு முடியும் எனல்

198.அவற்றுள்
செய்கென் கிளவி வினையொடு முடியினும்
அவ்வியல் திரியா தென்மனார் புலவர்.

மேற் சொல்லப்பட்டவற்றுள் செய்கு என்பதற்கு ஓர் வேறுபாடு
உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். மேற் சொல்லப்பட்டவற்றுள் செய்கு என்னும் சொல் வினையோடு முடிந்துழியும், பாலுணர்த்தும் இயற்கையில் திரியாது, எ - று.

எ - டு. காண்கு வந்தேன் எனவரும். காண்கு யான் எனப் பெயரோடும் முடிதல் இலக்கணம் என்று கொள்க.

அஃதேல், முற்றுச் சொல் பெயர் கொண்டு முடிதல் யாண்டுப் பெற்றாம் எனின், முன் முற்றுச் சொல்லிலக்கணம் கூறுகின்றுழி, அவைதாம், “தத்தம் கிளவி யடுக்குந வரினும்-எத்திறத் தானும் பெயர்முடி பினவே” (சூ. 244) என்னுஞ் சூத்திரத்தாற் பெறுதும். ஈண்டு முடியினும் என்றதற்குப் பொருள் தொடர்புபடினும் என்றவாறாகக் கொள்க.

(7)

உயர்திணைப் படர்க்கை ஒருமை வினைமுற்று

199.அன் ஆன் அள் ஆள் என்னும் நான்கும்
ஒருவர் மருங்கிற் படர்க்கைச் சொல்லே.

உயர்திணைப் படர்க்கை வினையுள் ஒருமை வினை உணர்த்துதல்
நுதலிற்று.

இ - ள். அன் முதலாக ஓதப்பட்ட நான்கும் உயர்திணை ஒருமை உணரவரும் படர்க்கைச் சொல்லாம், எ - று.

எ - டு. உண்டனன், உண்கின்றனன், உண்பன்; உண்டான், உண்ணாநின்றான், உண்பான்; உண்ணான் இவை ஆண்பால் உணர வந்தன, உண்டனள், உண்கின்றனள், உண்பள்; உண்டாள், உண்கின்றாள், உண்பாள்; உண்ணாள் இவை பெண்பால் உணரவந்தன. பிறவும் அன்ன

(8)

உயர்திணைப் படர்க்கைப் பன்மை வினைமுற்று

200.அர் ஆர் ப என வரூஉம் மூன்றும்
பல்லோர் மருங்கிற் படர்க்கைச் சொல்லே.

உயர்திணைப் படர்க்கைப் பன்மை வினை உணர்த்துதல்
நுதலிற்று.

இ - ள். அர், ஆர், ப என வரும் மூன்று சொல்லும் உயர்திணைப் படர்க்கைப் பன்மைவினை உணர வரும் சொல்லாம், எ - று.