[வினையியல்]சொல்லதிகாரம் தெய்வச்சிலையார்117

117

இன்னும் ‘குறிப்பொடு கொள்ளு மென்ன கிளவியும்’ என்றதனாற் பைங்கண்ணன், புன்மயிரன் எனப் பண்பினாகிய சினைமுதற் கிளவியாகி இருதிணைக்கும் பொதுவாகி வரும் வினைக்குறிப்பும் கொள்ளப்படும்.

(17)

உயர்திணைக் குறிப்பு வினைமுற்றின் ஈறு

209.பன்மையும் ஒருமையும் பாலறி வந்த
அன்ன மரபிற் குறிப்பொடு வரூஉம்
காலக் கிளவி உயர்திணை மருங்கின்
மேலைக் கிளவியொடு வேறுபா டிலவே.

குறிப்பு வினைச்சொற்கு ஈறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். பன்மையும் ஒருமையும் ஆகிப் பால் விளங்க வந்தனவாகிய மேற்சொல்லப்பட்ட மரபினவாகிக் குறிப்பொடு வரூஉங்காலத்தை யுடைய சொல் உயர்திணைமருங்கின் மேற் சொல்லப்பட்ட சொல்லொடு வேறுபாடில, எ - று.

இவ்வாறு மாட்டெறிந்ததனான் ஆண்டு ஓதிய ஈறே வினைக்குறிப்பிற்கும் ஈறு என்றவாறாம். ஏற்புழிக் கோடல் என்பதனான் ஈண்டு ஏற்பன கொள்ளப்படும்.

எ - டு. உடையம், உடையாம், உடையெம், உடையேம் இவை உளப்பாட்டுத் தன்மை. உடையன், உடையேன் இவை தனித்தன்மை. உடையன், உடையான், உடையள், உடையாள், உடையர், உடையார், உடையோன், உடையோள், உடையோர் இவை படர்க்கை. ஏனையவற்றோடும் இவ்வாறே ஒட்டிக்கொள்க. பிறவற்றினும் ஏற்பன வந்தவழிக் கண்டுகொள்க.

(18)

அஃறிணைப் பன்மைத் தெரிநிலை வினைமுற்று

210.அ ஆ வஎன வரூஉம் இறுதி
அப்பான் மூன்றே பலவற்றுப் படர்க்கை.

நிறுத்த முறையானே அஃறிணை வினை உணர்த்துவான் எடுத்துக் கொண்டார். அவற்றுள், தன்மைக்கண் கூற்று நிகழாமையானும், முன்னிலை விரவு வினையாதலானும், அஃறிணைக்கேயுரித்தாகி வருவது படர்க்கை ஆதலான், அது தெரிநிலை வினை, குறிப்பு வினை என இருவகைப்படுதலின், அவற்றுள், தெரிநிலை வினை உணர்த்துவார் முதற்பட அதற்கண் பலவறிசொல் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

அஃதற்றாக, கிளியும், பூவையும் தன்வினை உரைக்குமாதலின், அஃறிணைக்கண் தன்மைவினை இன்றென்றது என்னையெனின், கிளியும், பூவையும் ஆகிய சாதி எல்லாம் உரையாடும் என்னும் வழக்கின்மையானும், அவை உரைக்குங்கால் ஒருவர் உரைத்ததைக் கொண்டு உரைக்கும் ஆதலானும், ஒருவன்பாடின பாட்டை நரம்புக் கருவியின்கண் ஓசையும் பொருளும்பட இயக்கியவழிக், கருவியும் உரையாடிற்றாதல் வேண்டுமாகலானும், அவ்வாறு வருவன மக்கள் வினையாதலால் தன்மைவினை யன்றென்க. யான் என்னும் பெயரை விரவுப் பெயர்க்கண் ஓதாது உயர்திணைக்கண் ஓதினமையானும் அஃறிணைக்கண் தன்மைவினை இன்றென்க.