எ - டு. இப் பண்டியுள்ளது எவன், இப் பண்டியுள்ளன எவன் என வரும். (22) அஃறிணைக் குறிப்புவினைமுற்று 214. | 1இன்றில வுடைய என்னுங் கிளவியும் அன்றுடைத் தல்ல என்னுங் கிளவியும் பண்புகொள் கிளவியும் உளவென் கிளவியும் பண்பி னாகிய சினைமுதற் கிளவியும் ஒப்பொடு வரூஉங் கிளவியொடு தொகைஇ அப்பாற் பத்தும் குறிப்பொடு கொள்ளும். |
அஃறிணை வினைக்குறிப்பாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். இன்றென்பது முதலாகச் சொல்லப்பட்ட பத்தும் காலம் குறிப்பொடு கொண்டு நிற்கும், எ - று. எ - டு. இன்று, இல என்பன ஒரு பொருளின் இன்மை உணர வருவன. கோடின்று கோடில எனவரும். உடைய, உடைத்து என்பன ஒரு பொருட்கு ஒரு பொருள் உண்டென்னும் பொருண்மேல் வரும். கோடுடைத்து. கோடுடைய எனவரும். அன்று, அல்ல என்பன தாம் குறித்த பொருளை விளக்க வரும். அது வன்று, அவை யல்ல என வரும். பண்புகொள் கிளவியாவது பண்பினைக் கொண்டு நிற்குஞ் சொல். இது கரிது, இது நெடிது என வருவன. உளவென் கிளவியாவது ஒரு பொருளின் உண்மை உணரநிற்பது. அவை உள எனவரும். இதன் ஒருமை யாகிய உண்டு என்னும் சொல் இருதிணைக்கும் உரித்தாகலின் ஈண்டு ஓதாராயினர். பண்பினாகிய சினைமுதற் கிளவியாவது பண்பும் சினையும் அடுத்து முதலொடு முடிவது. குறுந்தாட்டு, குறுந்தாள எனவரும். ஒப்பொடு வரூஉங் கிளவியாவது ஒன்றனோடு ஒன்று ஒக்கும் என்னும் பொருண்மை குறித்து வருவது. அன்னது, அனையது, அன்ன, அனைய எனவரும். (23) அஃறிணைக் குறிப்புவினை முற்றின் ஈறு 215. | பன்மையும் ஒருமையும் பாலறி வந்த அன்ன மரபிற் குறிப்பொடு வரூஉங் காலக் கிளவி அஃறிணை மருங்கின் மேலைக் கிளவியொடு வேறுபா டிலவே. |
1. இதனையும் அடுத்த நூற்பாவையும் இணைத்து ஒரே நூற்பாவாகக் கொள்வர் இளம்பூரணர்.
|