இதுவும் அது 242. | ஏனைக் காலமும் மயங்குதல் வரையார், |
இதுவும் அது இ - ள். இறப்பும் எதிர்வும் தம்முள் மயங்குதலன்றி அவற்றோடு நிகழ்காலமும் மயங்கப்பெறும், எ - று. எ - டு. யாம் விளையாடுங் கா என்றவழி முன்பு விளையாடுங் கா, இன்று விளையாடுங்கா, நாளை விளையாடுங் கா என மூன்று காலத்துக்கண்ணும் வந்தவாறு கண்டுகொள்க. (51) அஃதேல், வினைச்சொற்கள்--முற்றும், பெயரெச்சமும், வினையெச்சமும் என மூவகைப்படும். அவற்றுட் பெயரெச்சம் வினையெச்சம் என்பன இத்தன்மைய என்று எடுத்தோதி, முற்றுச்சொல்லாவது இத்தன்மையது என்று ஓதிற்றிலர்,அதற்கு இலக்கணம் யாங்குப் பெறுதும் எனின், எச்சவியலுட் பெறுதும். வினைக்கு இன்றியமையாத முற்றினை ஒழிபியல் கூறுகின்றுழிக் கூறிய அதனாற் பெற்றதென்னை எனின், அஃது எமக்குப் புலனாயிற் றன்று. அஃதேல், வினையிலக்கணம் அறிந்தேனாகுங்கால் முற்றிலக்கணமும் அறிதல் வேண்டும் அன்றே. அதனை ஆண்டுக் கூறியவாறு ஈண்டுரைத்தல் வேண்டும் எனின், உரைக்குமாறு:-- முற்றுச் சொற்கு இலக்கணம் 243. | 1இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றச் சிறப்புடை மரபின் அம்முக் காலமும் தன்மை முன்னிலை படர்க்கை என்னும் 2மூவிடத் தான வினையினுங் குறிப்பினும் மெய்ம்மை யானும் 3ஈரிரண் டாகும் அவ்வா றென்ப முற்றியல் மொழியே. |
முற்றுச் சொற்கு இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என வினைச்சொற்குச் சிறப்புடைத்தாகிய மூன்று காலத்தானும், தன்மை முன்னிலை படர்க்கை என்னும் மூன்றிடத்தானும், தொழிலானும் குறிப்பானும் பொருளானும் முற்று இயலும் மொழிவகை நிலைமையான் இருபத்து நான்கு, எ - று.
1. இது முதல் உள்ள மூன்று நூற்பாக்களும் பிறருரையில் எச்சவியலில் உள்ளன. இதுபற்றிய ஆய்வினை விளக்கவுரையிற் காண்க. 2. (பா-ம்) அம்மூவிடத்தான். 3. இவ்விரண்டு-சேனாவரையம்.
|