என்ற பகுதிக்கு இலக்கிய நயம் தவழ உரை தருகின்றார். அவ்விடத்து நச்சினார்க்கினியர் உரையினின்றும் வேறுபடும் இடங்களையும் அடிக் குறிப்பில் காட்டியுள்ளேன். ஆண்டுக் காண்க. இன்னும் அவ்விடத்துப் ‘பூத்தொடை போல’ என்றும் வாலும் செவியும் இழந்த ஞமலியைப் பின்னும் ஞமலி யென்றே வழங்கினாற் போல என்றும் உவமைகள் காட்டி விளக்கும் திறமும் பெரிதும் பாராட்டுதற்குரியதாகும்.
4. வடமொழிப் புலமை இவர்தம் தமிழ்மொழிப்புலமை போலவே வடமொழிப் புலமையும் பெரிதும் பாராட்டுதற்குரியதாய் விளங்குகின்றது. (அ) 67 ஆம் நூற்பாவில் பெயர் உருபேற்பதில் வடமொழி, தென்மொழி ஆகிய இரு மொழிகளுக்கும் இடையே உள்ள வேற்றுமையைக் கூறியிருப்பதும், (ஆ) 69 ஆம் நூற்பாவில் முதல் என்பதனை வடநூலாசிரியர் காரகம் என்ப எனக் கூறியிருப்பதும், (இ) 82 ஆம் நூற்பாவில் கருமம் என்பது வடமொழிச் சிதைவு எனக் கூறியிருப்பதும், (ஈ) 88 ஆம் நூற்பாவில் தாம் கூறிய உரை பிறருரையினின்றும் வேறுபட்டதெனினும், தாம் கூறிய உரை பாணினியார்க்கும் ஒக்கும் எனக் கூறியிருப்பதும், (உ) 107 ஆம் நூற்பாவில் இந்நிகரனவெல்லாம் வந்தவழி அனுமித்துக் கொள்க எனக் கூறியிருப்பதும், (ஊ) 293 ஆம் நூற்பாவில் வடநூலார் தாது என்றது உரிச் சொற்களையே குறிக்கும் எனக் கூறியிருப்பதும், இன்னும் அந்நூற்பாவிலேயே இசை, குறிப்பு, பண்பு என்பனவற்றை வட நூலார், முறையே முக்கியம், இலக்கணை, கௌணம் என்ப எனக் கூறியிருப்பதும், (எ) 392 ஆம் நூற்பாவில் இவறென்பது லோபம் குறித்தது எனக் கூறியிருப்பதும், (ஏ) 408 ஆம் நூற்பாவில் அடை எனினும் விசேடணம் எனினும் ஒக்கும் எனக் கூறியிருப்பதும், (ஐ) 411 ஆம் நூற்பாவில் வேற்றுமைத் தொகை, உவமைத் தொகை, வினைத்தொகை, பண்புத் தொகை என்பன தம்முள் ஒருபுடை ஒப்புமையுடையவாதலின் பாணினியார் தற்புருட சமாசம்
|