காலம் என்பதன்கண் உருபு தொக்கு நின்றது. இடம் என்பதன்கண் உம் எஞ்சி நின்றது. அவையாவன:--தன்மைக்கண் எட்டும், முன்னிலைக் கண் எட்டும், படர்க்கைக்கண் எட்டும் ஆம். ஒருமையும் பன்மையும் எனத் தமிழ் நடை இருவகைப் படுதலின் தன்மைக்கண் வரும் எட்டும் ஒருமை உணர்த்துவன நான்கும், பன்மை உணர்த்துவன நான்கும் என இருவகைப் படும். எ - டு. உண்டேன், உண்ணாநின்றேன், உண்பேன், கரியேன் இவை மூன்று காலமும், வினைக்குறிப்பும்பற்றி ஒருமைக்கண் வந்தன. உண்டனம், உண்ணாநின்றனம், உண்குவம், கரியம் என்பன அவ்வாறு பன்மைப் பொருண்மைக்கண் வந்தன. முன்னிலைக்கண் எட்டும் இருவகைப்படும். உண்டனை, உண்ணா நின்றனை, உண்குவை, கரியை இவை ஒருமைபற்றி வந்தன. உண்டனிர், உண்ணாநின்றனிர், உண்குவீர், கரியீர் இவை நான்கும் பன்மைபற்றி வந்தன. படர்க்கைக்கண் எட்டும் இருவகைப்படும். அவற்றுள் ஒருவனை உணர்த்துவதும், ஒருத்தியை உணர்த்துவதும், ஒன்றனை உணர்த்துவதும், ஒருமையென அடங்கும். பலரை உணர்த்துவதும் பலவற்றை உணர்த்துவதும் பன்மையென அடங்கும். உண்டனன், உண்ணாநின்றனன், உண்பன், கரியன் எனவும்; உண்டனள், உண்ணாநின்றனள், உண்பள், கரியள் எனவும்; உண்டது, உண்ணாநின்றது, உண்பது, கரியது எனவும் இவை பொருண்முகத்தான் ஒருமையாதலின், மூன்று காலமும் வினைக்குறிப்பும் பற்றி நான்காய் அடங்கின. உண்டனர், உண்ணாநின்றனர், உண்குவர், கரியர் எனவும்; உண்டன, உண்ணாநின்றன, உண்குவ, கரிய எனவும் இவை பொருள் முகத்தாற் பன்மையாதலின், மூன்று காலமும் வினைக் குறிப்புமாகி நான்காய் அடங்கின. வினையெச்சமும், பெயரெச்சமும், தொழிலும் காலமும் உணர்த்தினல்லது. இடமும் பாலும் உணர்த்தா என்பதூஉம், முற்றுச் சொல் தொழிலும் காலமும் இடமும் பாலும் உணர்த்தும் என்பதூஉம் கண்டு கொள்க. (52) மேலதற்கு ஓர் புறநடை 244. | எவ்வயின் வினையும் அவ்வயின் நிலையும். |
மேலதற்கு ஓர் புறநடை உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். தொழிலும் காலமும் இடமும் பாலும் உணரவரும் வினைச்சொலன்றி, மூன்றிடத்திற்கும் பொதுவாகி வரும் வினைச் சொல்லும் முற்றாம் நிலைமையைப் பெறும், எ - று. அவையாவன:--வியங்கோள், இன்மை செப்பல், வேறென் கிளவி, செய்ம்மன, பெயரெச்சமல்லாத செய்யும் என்னுஞ் சொல். (53) முற்றுச் சொல் பெயரொடு முடியும் எனல் 245. | அவைதாம், தத்தங் கிளவி யடுக்குந வரினும் எத்திறத் தானும் பெயர்முடி பினவே. |
|