முற்றுச்சொல் தொடர்ந்தியலுமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். மேற் சொல்லப்பட்ட முற்றுச் சொற்களுள் தத்தமக்கு ஏற்ற வினைச்சொல் அடுக்கி வரினும், உம்மையான், அடுக்காது வரினும் எவ்வழியானும் பெயர் முடிபினையுடைய, எ - று. என்பது முற்றுச் சொல் பெயரோடல்லது தொடரவும் படாது என்றவாறாயிற்று. எ - டு. உண்டான் சாத்தன், நல்லன் அரசன் இவை தனி வந்தன. உண்டான், தின்றான், ஓடினான், பாடினான் சாத்தன்; நல்லன், அறிவுடையன், செவ்வியன் சான்றோர் மகன்; இவை வினையும் வினைக்குறிப்பும் அடுக்கிவந்தன. தத்தங் கிளவி என்றதனான் ஒருகாலத்திற் கேற்ற வினையே அடுக்குவது என்று கொள்க. எத்திறத்தானும் என்றமையால் சாத்தன் உண்டான்; அரசன் நல்லன் எனவும்; சாத்தன் உண்டான், தின்றான், ஓடினான்; அரசன் வென்றி உடையன், செவ்வியன் எனவும் வரும். இவை எழுவாயும் பயனிலையும் ஆகாவோ எனின், எழுவாய்த் தொடரோடு முற்றுத் தொடரிடை வேறுபாடின்மை வேற்றுமை யோத்தினுட் கூறப்பட்டது. அன்றியும், பெயர் முந்துற்றதனை எழுவாய்த் தொடர் என்றும், வினைமுந்துற்றதனை முற்றுத்தொடர் என்றும் வழங்கினும் அமையும். இவை மூன்று சூத்திரமும் ஈண்டைத் தொடர்புபட்டுக் கிடந்த இதனை, உரை யெழுதுவோர், பிரிநிலை வினையென்னுஞ் சூத்திரத்துட் சொல்லப்பட்ட பெயரெச்ச வினையெச்சம் என்பவற்றை ஈண்டு ஓதப்பட்ட பெயரெச்ச வினையெச்சமாகக் கருதி, ஆண்டுச் சேரவைத்தார் என்பாரும் உளர். அஃது அற்றாக, வினைச்சொல்--பெயரெச்சம், வினையெச்சம், முற்றென மூவகைப்பட்டதாயின், வினையெச்சமும், முற்றும் அடுக்கி வருமாறு கூறிப் பெயரெச்சம் அடுக்கி வருமாறு கூறாதது என்னையெனின், பெயரெச்ச வடுக்கு வினையெச்ச அடுக்குப் போல் முன்னது முடிய முடியாமையின் கூறாராயினார். சிறுபான்மை வருவன செய்யுண் மருங்கினும் என்னும் அதிகாரப் புறநடையாற் கொள்ளப்படும். (54) வினையியல் முற்றும்.
|