7. இடையியல் இடைச் சொல் இலக்கணம் 246. | 1இடையெனப் படுவ பெயரொடும் வினையொடும் நடைபெற் றியலும் தமக்கியல் பிலவே. |
இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின், இடைச்சொல் ஓத்து என்னும் பெயர்த்து: இடைச்சொல் உணர்த்தினமையாற் பெற்ற பெயர். இது பெயரையும் வினையையும் சார்ந்து தோன்றுதலின் அவற்றின் பின் கூறப்பட்டது. “இடையெனப் படுப...........தமக்கியல் பிலவே” என்பது இடைச் சொல் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். இடையென்று சொல்லப்படுவன பெயரோடு கூடியும் வினையோடு கூடியும் வழக்குப் பெற்றியலுமல்லது தமக்கென வழக்கில, எ - று. என்றது, மேல் அதிகரிக்கப்பட்ட சொல் நான்கினுள் இடைச் சொல்லாவது பெயரும், வினையும் போலத் தனித்தனி பொருள் உணர உச்சரிக்கப்படாது; பெயர் வீனைகளைச் சார்ந்து புலப்படும். எ - று. பெயரும் வினையும் இடமாக நின்று பொருள் உணர்த்துதலின் இடைச்சொல்லாயிற்று. மேற் பெயரியலுள்ளும் அவற்றுவழி மருங்கிற் றோன்றம் (சூ-5) என ஓதி, ஈண்டும் இவ்வாறு கூறுதல், கூறியது கூறலாம் பிற எனின், ஆண்டுத் தோற்றுவாய் செய்தார் ஈண்டிலக்கணங் கூறினார் என்க. ‘பெயரொடும் வினையொடும் நடைபெற் றியலும்’ என்றதனால், பொருள் உணர்த்தும்வழிப் பெயர்ப் பொருண்மை உணர்த்தியும், வினைப் பொருண்மை உணர்த்தியும் வருமதல்லது வேறு பொருள் இலதென்றுமாம். (1) இடைச் சொல்லின் பாகுபாடு 247. | அவைதாம், புணரியல் நிலையிடைப் பொருள் நிலைக்குதநவும் வினைசெயல் மருங்கிற் காலமொடு வருநவும் வேற்றுமைப் பொருள்வயின் உருபா குநவும் அசைநிலைக் கிளவி யாகி வருநவும் |
1. ‘இடையெனப் படுப’ என்பது இளம்பூரணரும நச்சினார்க்கினியரும் கொண்ட பாடம்.
|