தத்தங் குறிப்பின் என்பதற்குச் சார்ந்த சொல்லின் குறிப்பினான் எனவும், ஒப்பில்வழி என்பதனை ஒரு சொல்லோடு பொருத்த மின்றித் தனி வந்துழி எனவும் பொருள் உரைப்பினும் அமையும். அஃது அற்றாக, ஒப்பில்வழி என்பதற்கு ஒக்கும் என்னுஞ் சொல்வாராத உவம உருபெனப் பொருள் உரைப்பவாலெனின். 1ஒப்பினானும் பண்பினானுமென்--றப்பாற் காலங் குறிப்பொடு கொள்ளும் என்றமையானும், போல, அன்ன, ஏய்ப்ப, உறழ என்பன சாத்தன் புலி போலும், எனவும் புலி போலப் பாய்ந்தான் எனவும், புலி போன்ற சாத்தன் புலிபோலுஞ் சாத்தன் எனவும், இவ்வாறு பிறவும், முற்றும் வினையெச்சமும், பெயரெச்சமுமாகி வருதலினாலும் அவை யெல்லாம் வினைக்குறிப்பென்று கொள்க. அவற்றுள், ‘புணரியல் நிலையிடைப் பொருள் நிலைக்குதவுந’ எழுத்ததி காரத்துக் கூறப்பட்டன. ‘வினைசெயல் மருங்கிற் காலமொடு வருந வினையியலுட் கூறப்பட்டன. ‘வேற்றுமைப் பொருள்வயின் உருபாகுந’ வேற்றுமை யோத்தினுட் கூறப்பட்டன. ஏனை நான்கும் ஈண்டு ஓதப்படுகின்றன. (2) இடைச்சொற்கு உரியதோர் மரபு 248. | அவைதாம் முன்னும் பின்னும் மொழியடுத்து வருதலும் தம்மீறு திரிதலும் பிறிதவண் நிலையலும் அன்னவை எல்லாம் உரிய வென்ப. |
இதுவும் இடைச் சொற்கு உரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். மேற் சொல்லப்பட்ட இடைச்சொற்றாம் மொழியை முன்னும் பின்னும் அடுத்து வருதலும், தத்தம் ஈறுதிரிந்து வருதலும், பிறிதோர் இடைச்சொல் ஆண்டு அடுத்து வருதலும் ஆகிய அத்தன்மைய எல்லாம் உரிய, எ - று. எ - டு. அதுமன், கேண்மியா என்பன மொழி முன்2 வந்தன. கொன்னூர், ஒ ஓ கொடியை என்பன மொழிப் பின் வந்தன. மன்னைச் சொல் (சூ-4) என்றவழி ஈறுதிரிந்தது. வருகதில் லம்ம (அகம்-276) என்பது பிறிது அவண் நின்றது. பிறவுமன்ன. (3) மன் என்னும் இடைச்சொல்லின் பொருள் 249. | கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவியென்(று) அம்மூன் றென்ப மன்னைச் சொல்லே. |
ஈண்டு உரைக்கப்படுகின்ற இடைச்சொல் நான்கும் பொருள் புணர் இடைச்சொல்லும், பொருள் புணரா இடைச்சொல்லும் என இருவகைப்படும். அவற்றுள்,
1. வினை. சூ.16. 2. இங்குக் கூறும் முன், பின் என்பன இடம் பற்றியன.
|