142தொல்காப்பியம்[இடையியல்]

142

எ - டு. கொன் முனை யிரவூர் போல (குறுந்-91.) என்பது அச்ச முணர நின்றது. கொன்னே கழிந்தன் றிளமையும் (நாலடி-55.) என்புழிப் பயனின்மை யுணர நின்றது. கொன் வரல் வாடை என்ற வழிக், காலத்து வருகின்ற வாடை எனக் கால முணர நின்றது. கொன்னூர் துஞ்சினும் (குறுந்-138.) என்றவழிப், பெருமையுணர நின்றது.

இம்மூன்று சொல்லும் பெயர் வினையை யொட்டி வாராது தனிவந்து ஒப்பில் வழியாற் பொருளுணர்த்தினமையான், ஒப்பில் வழியாற் பொருள் செய்தன. பிறவும் இவ்வாறு வருவன அறிந்து கொள்க.

(6)

உம் என்னும் இடைச்சொல்லின் பொருள்

252.எச்சம் சிறப்பே ஐயம் எதிர்மறை
முற்றே எண்ணே தெரிநிலை ஆக்கமென்(று)
அப்பால் எட்டே உம்மைச் சொல்லே.

இதுவும் அது.

இ - ள். எச்ச முதலாகச் சொல்லப்பட்ட எண்வகைப் பொருளும் உணர வரும்: உம்மைச் சொல், எ - று.

எ - டு. எச்சம் இறந்தது தழீஇயதும், எதிரது தழீஇயதும், என இருவகைப்படும். சாத்தனும் வந்தான் என்றவழி, முன்னொருவன் வரவு குறித்தானாயின் இறந்தது தழீஇயதாம். பின்னொருவன் வரவு குறித்தானாயின் எதிரது தழீஇயதாம். ஏனையொழிந்த பொருளைக் குறித்தமையின் எச்சமாயிற்று.

சிறப்பு என்பது மிகுதி. அஃது உயர்பான் மிகுதலும், இழிபான் மிகுதலும் என இருவகைப்படும். 1அக்காரம், யாவரே தின்னினுங் கையாதாங் கைக்குமே, தேவரே தின்னினும் வேம்பு என்றவழி, யாவர் என்றது இழிபு குறித்து நின்றது. தேவர் என்பது உயர்வுகுறித்து நின்றது.

ஐயம் என்பது ஐயப்பட்ட பொருண்மை குறித்து வருவது. ஏனல்காவ லிவளு மல்லள், மான்வழி வருகுந னிவனு மல்லன். நரந்தங் கண்ணி யிவனோ டிவளிடை கரந்த வுள்ளமொடு என்றவழிக், காரணம் பிறிதாகல் வேண்டும் என்னும் ஐயங் குறித்து நின்றது.

எதிர்மறையாவது யாதானும் ஒரு தொழிலை எதிர்மறுத்த தொழிற் கண்வரும். சாத்தன் வருதற்கு முரியன் என்றவழி, வாராமைக்கும் உரியன் எனவரும்.

முற்றென்பது மற்றொரு பொருளை நோக்காது நிற்கும். தமிழ்நாட்டு மூவேந்தரும் வந்தார் எனவரும். முழுதும் உணர்ந்தார் என்பதும் அது.

எண் என்பது பலபொருளை எண்ணுதல் குறித்து வரும். 2மண்டிணிந்த நிலனும், நில னேந்திய விசும்பும் விசும்பு தைவரு வளியும் வளித் தலைஇய தீயும், தீ முரணிய நீரும் எனவரும்.


1. நாலடி. 112.

2. புறம். 2.