[இடையியல்]சொல்லதிகாரம் தெய்வச்சிலையார்143

143

தெரிநிலை என்பது ஒரு பொருளை ஐயப்படுதலும் துணிதலும் இன்றி, ஆராயும் நிலைமைக்கண் வரும். 1ஐதேய்ந் தன்று பிறையுமன்று, மைதீர்ந் தன்று மதியு மன்று எனவரும்.

ஆக்கம் உம்மையடுத்த சொற்பொருண்மேல் ஆகும் நிலைமையைக் குறித்து வரும். வாழும் வாழ்வு, உண்ணுமூண் எனத் தொழிலினது ஆக்கங் குறித்து நின்றவாறு கண்டுகொள்க. இது பெயரெச்ச வினைச் சொலன்றோ எனின், ஆம். அதன்கண் உம் இடைச்சொல் என்க. அதனானே யன்றே 2உம் முந்தாகு மிடனுமா ருண்டே என்னும் இலக்கணத்தால், 3நெல் லரியுமிருந் தொழுவர் என்னும் பாட்டினுள், செஞ்ஞாயிற்று வெயின் முனையிற், றெண்கடற் றிரைமிசைப் பாயும் எனற்பாலது பாயுந்து என வந்தது. இவ்விலக்கணம் வினையியலுள் ஓதாமையால் பெயரெச்ச உம் இடைச்சொல் என்று கொள்ளப்படும். பாயும் புனல் என்பது பாய்புனல் எனத் தொக்குழி, வேற்றுமைப் பொருட்கண் உருபு, பெயர் நிற்பத் தொக்கவாறு போல, வினை நிற்ப உருபு தொகுதலானும், செய்யும் என்பது வினையும் உருபுமாகிய இரு நிலைமைத்து என்று கொள்க. செய்யும் என்னும் முற்றுச் சொல்லின்கண் உம் எவ்வாறு வந்த தெனின், அது மற்றொரு பொருளைக் குறித்து நில்லாமையின் ஈண்டு இடமின்றென்க. முற்றி நிற்றலின் முற்றும்மை எனினும் இழுக்காது.

ஆக்கவும்மை என்பதற்கு நெடியனும் வலியனும் ஆயினான் என உதாரணங் காட்டுபவாலெனின், அஃது எண்ணும்மை என்க. தனிவரின் எச்சவும்மையாம்.

(7)

‘ஓ’ என்னும் இடைச்சொல்லின் பொருள்

253.

பிரிநிலை வினாவே எதிர்மறை ஒழியிசை
தெரிநிலைக் கிளவி சிறப்பொடு தொகைஇ
இருமூன் றென்ப ஓகா ரம்மே.

இதுவும் அது

இ - ள். பிரிநிலை முதலாக ஓதப்பட்ட ஆறிடமும் என்று சொல்லுவார்: ஓகாரமாகிய இடைச்சொல் பொருள் உணர்த்துமிடம், எ - று.

எ - டு. பிரிநிலையாவது பிறபொருளினின்றும் பிரித்தமை தோன்ற வருவது. 4கானங் காரெனக் கூறினும், யானோ தேறேனவர் பொய் வழங் கலரே, அவரோ வாரார் எனவரும். எல்லாரும் தேறினும் யான் தேறேன், எல்லாரும் வரினும் அவர் வாரார் எனப் பிரிநிலைப் பொருண்மை தோன்றியவாறு கண்டுகொள்க.

வினா என்பது வினாவுதற் பொருண்மேல் வரும். அதுவோ? உண்டாயோ? எனவரும்.


1. கலி. 55.

2. இடை, சூ. 43.

3. புறம். 24.

4. குறுந். 29.