என்று குறியிட்டார் எனக் கூறியிருப்பதும், இவர்தம் வடமொழிப் புலமையை நன்கு விளக்கும். 5. திருக்குறளுக்கு இவர்தரும் புத்துரைகள் தொல்காப்பியத்திற்கு உரையெழுது முகமாக ஆங்காங்கே சிற்சில திருக்குறள்களுக்கும் இவர் உரை வகுத்துப் போகின்றார். அவை வருமாறு:-- (1) | “அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை.” | (2) | “வானின் றுலகம் வழங்கி வருதலால் தானமிழ்தம் என்றுணரற் பாற்று.” | (3) | “அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார் வழுக்கியும் கேடீன் பது.” | (4) | “அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி.” |
இந்நான்கு குறள்களில் முதலிரண்டிற்கும் முறையே 90, 103 ஆம் நூற்பாக்களிலும், பின்னைய இரண்டிற்கும் 425 ஆம் நூற்பாவிலும் உரை வகுத்துச் சென்றுள்ளார்.
6. நூலாசிரியரைப் பற்றிய குறிப்பு தக்க உரையாசிரியர்கள் தாம் உரை எழுதுங்கால், தாம் எழுதும் நூலுக்குரிய நூலாசிரியரைப் பற்றியும் ஓரிரு குறிப்புக்கள் கூறிச் செல்வது வழக்கம். இந்நிலை பரிமேலழகர், அடியார்க்கு நல்லார், சிவஞானமுனிவர் ஆகியோரிடத்துக் காணலாம். அது போன்றே இவ்வுரையாசிரியரும் தொல்காப்பியரைப் பற்றி ஒரு குறிப்புச் சொல்கின்றார். ‘காலம் உலகம்’ (கிளவியாக்கம்-56) என்று தொடங்கும் நூற்பாவில் ‘சொல்’ என்பது பற்றி விளக்கம் தருகின்றவர், சொல் என்பது எழுத்தினான் இயன்று பொருள் உணர்வது, அச் சொல்லினால் இயன்ற மந்திரம் விடம் முதலாயின தீர்த்தலின் தெய்வம் ஆயிற்று. இந்நூல் செய்தான் ஒரு வைதிக முனிவன் ஆதலின் சொல் என்பது வேதம் என்று கொள்ளப்படும்’ எனக் கூறுகின்றார். எனவே இவரது கூற்றால் தொல்காப்பியர் சமயச் சார்புடைய ஒரு முனிவரர் என அறியலாம். மாதொரு பாகனாகிய இறைவனே ஆதியில் தமிழ் நூல் அகத்தியருக்கு உணர்த்தியவனாவான். அவர் வழி வந்தவர் தொல்காப்பியர் ஆதலின் அவரும் அந்நெறி நிற்றல் இயற்கையே யன்றோ!
|