எ - டு. கொள்ளென்று கொடுத்தான். துண்ணென்று துடித்தது. ஒல்லென்று ஒலித்தது. பச்சென்று கிடந்தது. நிலனென்று நீரென்று. 1சினத்தைப் பொருளென்று கொண்டவன் எனவரும். இது மாட்டேற்று வகையான் எச்ச வாய்பாட்டதென்று கொள்க. இச்சொற்களானும் செய்யும் என்பதன்கண் உம் இடைச் சொல்லாயினவாறு கண்டு கொள்க. (11) தில் என்பதற்குப் புறனடை 257. | விழைவின் தில்லை தன்னிடத் தியலும். |
இத்துணையும் பலபொருள் குறித்த இடைச்சொல் ஓதி, இனி ஒரு பொருள் குறித்த இடைச்சொல் ஓதுகின்றா ராகலின், மேற்சொல்லப்பட்டவற்றுள் ஒரு சொற்குப் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று. இ - ள். விழைவுப் பொருட்கண் வரும் தில்லைச்சொல் சொல்லுவான்மாட்டே நிகழும், எ - று. உதாரணம் மேற்காட்டப்பட்டது. (12) ஏ, ஓ என்பவற்றிற்குப் புறனடை 258. | தெளிவின் ஏவும் சிறப்பின் ஓவும் அளபின் எடுத்த இசைய என்ப. |
இதுவும் அது. இ - ள். தேற்றேகாரமும், சிறப்பின் வரும் ஓகாரமும் அளபெடை பெற்று வரும் என்று சொல்லுவர், எ - று. உதாரணம் மேற்காட்டப்பட்டது. (13) மற்று என்னும் இடைச்சொல்லின் பொருள் 259. | மற்றென் கிளவி வினைமாற் றசைநிலை அப்பால் இரண்டென மொழிமனார் புலவர். |
ஒரு பொருள் குறித்த இடைச்சொல் உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். மற்று என்னுமிடைச்சொல் ஒரு வினையை மாற்றுதற் பொருட்கண்ணும், அசைநிலையாகியும் வரும், எ - று. எ - டு. 2மற்றறிவா நல்வினை யாமிளையம் என்றவழி மற்று என்பது பின்பு அறிவாம் என அக்காலத்துச் செய்கின்ற வினையை மாற்றி நின்றது. 3மற்றடிகள் கண்டருளிச் செய்க மலரடிக்கீழ் என்றவழி அசைநிலை யாயிற்று. (14)
1. குறள். 307. 2. நாலடி. 19. 3. சீவக. 1873.
|