[இடையியல்]சொல்லதிகாரம் தெய்வச்சிலையார்147

147

எற்று என்னும் இடைச்சொல்லின் பொருள்

260.எற்றென் கிளவி இறந்த பொருட்டே.

இதுவும் அது.

இ - ள். எற்று என்னும் சொல் கழிந்தது என்னும் பொருண்மை யுடைத்து, எ - று.

எ - டு. எற்றெ னுடம்பி னெழினலம் எனவரும்.

(15)

மற்றையது என்னும் இடைச் சொல்லின் பொருள்

261.மற்றையது என்னும் கிளவி தானே
சுட்டுநிலை ஒழிய இனங்குறித் தன்றே.

இதுவும் அது.

இ - ள். மற்றையது என்னுஞ் சொல் சுட்டி நின்ற பொருள் ஒழிய அதற்கினமாகிய பொருளைக் குறித்து நிற்கும், எ - று.

அது என்பது எவ்வாறு வந்தது எனின், மேல் வினைமாற்று என்றார், இது பொருள் மாற்று என்பதனை விளக்குதற்கு அது என்பதனைக் கூட்டியுரைத்தார். அது என்பது பெயராதலின், 1ஒருபாற்கிளவி ஏனைப்பாற் கண்ணும், வருவகைதாமே வழக்கென மொழிப என்பதனான் ஐந்து பாற்கண்ணும் கொள்க. அவ்வாறு கொள்ளவே. மற்றை என்பது இடைச் சொல்லாகி நின்று பிறபொருளுணர்த்தியவாறு கண்டுகொள்க.

இனங்குறித்து என்றமையாற், சுட்டப்பட்ட பொருட்கு இனமாகிய பொருளையே குறிக்கும். ஆடை கொணர்ந்தவழி, மற்றையதோ எனிற். கொணர்ந்ததொழியப் பிறிதுமோராடையைச் சுட்டியவாறு கண்டு கொள்க. ஒரு வினைசெய்வார் இருவருள்வழி, ஒருவனைக் கண்டவன் மற்றையவனோ என்றவழி, அதுவும் இனங்குறித்தது. பிறவுமன்ன.

(16)

மன்ற என்னும் இடைச் சொல்லின் பொருள்

262.

மன்றவென் கிளவி தேற்றம் செய்யும்.

இதுவும் அது.

இ - ள். மன்ற என்னுஞ் சொல் தேற்றப் பொருண்மையை உணர்த்தும், எ - று.

எ - டு. 2கடவு ளாயினு மாக-மடவைமன்ற வாழிய முருகே என்ற வழிக், கடவுளாயினும் மடவை எனத் தேற்றப் பொருண்மை காட்டிற்று.

(17)


1. பொருளியல். 28.

2. நற்றிணை. 34.