அசைநிலையும் இசை நிறையும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். ஏ என்னும் சொல்லும், குரை என்னும் சொல்லும் இசை நிறைத்தலாகியும், அசை நிலையாகியும் வரும் அவ்விரண்டு நிலைமையும் உடைய, எ - று. ஈண்டு ஏ என்றமையான் ஓரெழுத்தொரு மொழியாகிய உயிரெழுத்தே கொள்ளப்படும். முன் கூறப்பட்ட ஏகாரம் மொழிக்கு ஈறாகிவருதலின், உயிர்மெய்யென்று கொள்ளப்படும். இசை நிறையாவது இசை நிறைத்தற்பொருட்டு ஒருசொல்லோடு ஒட்டிவரும், அசை நிலையாவது தனிவரும். ஏ ஏ இவளொருத்தி பேடியோ வென்றார் என்றவழி, ஏ என்பது இசை நிறையாயிற்று. ஏ தெளிந்தேம்யாம் என்பது அசைநிலையாயிற்று. அளிதோ தானேயது பெறலருங் குரைத்தே. (புறம். 5), சேர்ந்த சினையிளங் குரைய வாயினும் என்பன இசைநிறை. நல்குர வென்னு மிடும் பையுட் பல்குரைத் துன்பங்கள் சென்று படும். (குறள். 1045.) இது அசை நிலை. (23) மா என்னும் இடைச் சொல்லின் பொருள் 269. | மாவென் கிளவி வியங்கோள் அசைச்சொல். |
அசைநிலை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். மா என்னுஞ் சொல் வியங்கோட்கண் அசைநிலையாகி வரும், எ - று. எ - டு. உப்பின்று - புற்கை யுண்கமா கொற்கை யோனே ஓர்கமா தோழியவர் தேர்மணிக் குரலே. என வரும். (24) முன்னிலை அசைச் சொற்கள் 270. | மியாயிக மோமதி இகுஞ்சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல். |
இதுவும் அது. இ - ள். இவை ஆறு சொல்லும் முன்னிலை வினைச்சொற்கண் அசைநிலையாகி வரும், எ - று. எ - டு. கேண்மியா. தண்டுறை யூரயாம் கண்டிக. காமஞ் செப்பாது கண்டது மொழிமோ (குறு. 2). சென்மதி பெரும. மெல்லம் புலம்ப கண்டிகும். காப்பும் பூண்டிசிற் கடையும் போகல் (அகம். 7) என வரும். இவை கேள், காண், மொழி, செல், காண், பூண் என்னும் பொருட்கண் ஆய் என்பது திரிந்து வந்தன. (25) இகும், சின் என்பவற்றிற்கு எய்தியதன்மேற் சிறப்பு விதி 271. | அவற்றுள், இகுமுஞ் சின்னும் ஏனை யிடத்தொடு தகுநிலை யுடைய என்மனார் புலவர். |
|