முற்றும்மை ஒரோவழி எச்சமும் ஆதல் 281. | முற்றிய உம்மைத் தொகைச்சொல் மருங்கின் எச்சக் கிளவி உரித்தும் ஆகும். |
இதுவும் உம்மைக்கண் வருவதோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். முற்றும்மைத் தொகைச்சொற் பொருண்மைக்கண் எச்சப் பொருண்மையும் உரித்து, எ - று. ஈண்டுத் தொகை என்றது எண்ணின் தொகை. எ - டு. நின்கையிற் காணம் பத்துங் கொடால் - என்றவழிச் சிலகொடுக்க என்றவாறாம். இது மறுத்த வாய்பாட்டானல்லது வராது. (36) ஈற்றசை ஏகாரத்திற்கு உரிய அளவு 282. | ஈற்றுநின் றிசைக்கும் ஏயென் இறுதி கூற்றுவயின் ஓரளபு ஆகலும் உரித்தே. |
ஏகாரத்திற்கு உரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். செய்யுள் இறுதிக்கண் நின்று ஒலிக்கும் ஏகாரம் சொல்லுமிடத்து ஒருமாத்திரையாகி நிற்கவும் பெறும், எ - று. எ - டு. கடல்போற் 1றோன்றல காடிறந் தோரே. (அகம்-1.) இது ஒரு மாத்திரையாகி நிற்கும். (37) உம், என என்பவற்றுக்குரிய முடிபு 283. | உம்மை எண்ணும் எனவென் எண்ணும் தம்வயிற் றொகுதி கடப்பா டிலவே. |
எண்ணின்கட் படுவதோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். உம்மையான் எண்ணப்பட்ட எண்ணும், எனவான் எண்ணப்பட்ட எண்ணும் தம்மிடத்துத் தொகை பெறுதல் நியமம் இல, எ - று. எ - டு. முத்தும் பவழமும் கொணர்ந்தான். நன்றெனத் தீதென நின்றது. முத்தும், பவழமும், பொன்னும் மூன்றுங் கொணர்ந்தான். நன்றெனத் தீதென இரண்டுமாகி நின்றது என இருபாற்றானும் வரும். (38) எண்ணேகாரம் இடையிட்டும் வரும் 284. | எண்ணே காரம் இடையிட்டுக் கொளினும் எண்ணுக்குறித் தியலும் என்மனார் புலவர். |
1. தோன்றல் - என்பது பாடம்.
|