7. உரைநலம் (அ) இவருடைய உரை சொற்செறிவும், பொருட் செறிவும் மிக்கதாகும். சுருங்கிய சொல்லால் விரித்துப் பொருள் விளங்கச் சொல்லும் வல்லமை இவருக்குண்டு. தம்முடைய கொள்கையைச் சொல்ல நினைவதே யன்றிப், பிறர் கொள்கையைச் சொல்லி அதனை மறுக்க எண்ணுவதில்லை. ஒரோவழி பிறர் உரைகளை மறுக்க நேரினும், அவர்களின் பெயர் கூறி வன்மையாக மறுப்பது இல்லை. இவர் பிறரை மறுக்குமிடங்கள் ஏழே ஆகும். அவற்றுள் 1, 32 ஆம் நூற்பாக்களிலுள்ள மறுப்புக்கள் இளம்பூரணருரைக் குரியதாகும். 88, 101, 443 ஆம் நூற்பாக்களிலுள்ள மறுப்புக்கள் இவர் நீங்கலாக உள்ள ஏனைய உரையாசிரியர்கள் உரைகளுக் குரியவாகும். 63 ஆம் நூற்பாவிலுள்ள மறுப்பு இப்பொழுதுள்ள உரைகள் எவற்றிற்கும் ஏற்பனவாய் இல்லை. 405 ஆம் நூற்பாவிலுள்ள மறுப்பும் தொல்காப்பிய உரையாசிரியர்களுக்கான மறுப்பன்று. எத்துணையோ இடங்கள் பிறர் உரையினின்றும் இவர் மாறுபட்டுரைத்திருப்பினும், ஆண்டெல்லாம் தம் கொள்கையைக் கூறினரே யன்றிப், பிறர் கொள்கையை எடுத்து என்றுரைப்பாரும் உளர் என்று கூடக் கூறவில்லை. இது இவரது பண்பு. (ஆ) நூற்பாக்களின் அமைப்பும் ஆய்வும்:- (1) தொல்காப்பியத்தில் இப்பொழுதுள்ள நூற்பாக்களின் அமைப்பு ஒரு சிறிது பிறழ இருப்பது நுண்ணிதாக ஆராய்வார்க்குப் புலனாகும். ஒருசில நூற்பாக்கள் ஆசிரியர் காலத்தில் இருந்த இடத்தி லன்றி இடம் மாறிவிட்டனவோ, அன்றி இயல் மாறிவிட்டனவோ என்று கூட எண்ணுதற்கு இடனாக இருக்கின்றன. இக்கருத்திற்கு அரணாக இவரது நூற்பா அமைப்பு முறையும், உரைக் குறிப்பும் விளங்குகின்றன. வினை என்பது முற்று, பெயரெச்சம், வினையெச்சம் ஆகிய மூன்றினையும் குறிக்கும். அங்ஙனமிருக்க வினையியலில் ஆசிரியர் வினையெச்சங்களையும், பெயரெச்சங்களையும் மட்டும் கூறி, முற்றினியல்பை எச்சவியலில் கூறியிருக்கக் காரணம் இல்லை. இந்நுண்மையை இவ்வுரையாசிரியர் மட்டுமே நன்கு ஆய்ந்து கண்டுள்ளனர். அவ்வாய்வின் பயனாகப் பிறர் உரைகளில் எல்லாம் எச்சவியலில் காணப்படும் முற்றினிலக்கணம் கூறும் நூற்பாக்கள் மூன்றையும், வினையியலின் ஈற்றில் கொண்டு வைத்துள்ளார் இவ்வுரையாசிரியர். அவ்விடத்து இவர் கூறும் கருத்தும் ஈண்டு நினைதற் குரியதாகும். அது வருமாறு:-
|