எனவே ஒரு முடிபுடையவல்ல; தொகை பெற்றும் பெறாதும் வரும் என்றவாறாம். எ - டு. | “வளிநடந் தன்ன வாஅய்ச்செலல் லிவுளியொடு கொடிநுடங்கு மிசைய தேரின ரெனாஅக் கடல்கண் டன்ன வொண்படைத் தானையொடு மலைமாறு மலைக்குங் களிற்றின ரெனாஅ உருமுரன் றன்ன வுட்குவரு முரசமொடு செருமேம் படூஉம் வென்றிய ரெனாஅ மண்கெழு தானை யொண்பூண் வேந்தர் வெண்குடைச் செல்வம் வியத்தலோ விலமே.” | (புறம்-197) |
என்புழி, வினைக்குறிப் பெண்ணிவந்து தொகைபெறாது நின்றது. “நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும், பேணாமை பேதை தொழில்.” (குறள்-833) இதுவும் தொகைபெறாது வந்தது. தொகை பெற்று வந்தன வந்தவழிக் கண்டுகொள்க. (44) எண்ணிடைச் சொற்கள் பிரிந்து சென்று ஒன்றுதல் 290. | என்றும் எனவும் ஒடுவும் தோன்றி ஒன்றுவழி யுடைய எண்ணினுள் பிரிந்தே. |
இதுவும் எண்ணின்கண் வருவதோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். என்றும், எனவும், ஒடுவும் எண்ணினுட் பிரிந்து ஒருவழித் தோன்றி எல்லாப் பெயரோடும் ஒன்றும் நெறியுடைய, எ - று. இதனானே ஒடு என ஓரிடைச்சொல் கூறியவாறு மாயிற்று. எ - டு. ‘இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென், றனைத்தே செய்யு ளீட்டச் சொல்லே” (எச்சவியல்-1) எனவும் “யாகா, பிறபிறக் கரோபோ மாதென வரூஉம், ஆயேழ் சொல்லும்” (சூ-30) எனவும், “பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்தும், இருடீர வெண்ணிச் செயல்” (குறள்-675) எனவும் இவை ஒரோவழிப் பிரிந்து நின்று எல்லாப் பெயரோடும் ஒன்றிமுடிந்தவாறு கண்டு கொள்க. வந்தது கண்டு வாராதது முடித்தல் என்பதனால் என்னும் என்னுஞ் சொல்லும் இவ்வாறு வருமெனக் கொள்க. “மியாயிக மோமதி யிகுஞ்சின் என்னும், ஆவயி னாறும் முன்னிலை யசைச்சொல்” (சூ-25) என்றவழி ‘என்னும்’ எனவும் வந்தது. எண்ணினுட் பிரிந்தெனப் பொதுப்படக் கூறினமையான் எல்லா எண்ணொடும் வரப்பெறும் என்று கொள்க. “சொல்லெனப் படுப பெயரே வினையென், றாயிரண் டென்ப வறிந்திசி னோரே” (பெயரியல்-4) என்றவழி ஏகாரம் எண்ணின்கண் வந்தது. பிறவும் பிற எண்ணோடு வருமாறு வந்தவழிக் கண்டுகொள்க. (45)
|