ஆராய்ச்சி முன்னுரை19

19

“அஃதேல், வினைச் சொற்கள் முற்றும், பெயரெச்சமும், வினையெச்சமும் என மூவகைப்படும். அவற்றுட் பெயரெச்சம், வினையெச்சம் என்பன இத்தன்மைய என்று எடுத்தோதி, முற்றுச் சொல்லாவது இத்தன்மையது என்று ஓதிற்றிலர். அதற்கு இலக்கணம் யாங்குப் பெறுதும் எனின், எச்சவியலுட் பெறுதும். வினைக்கு இன்றியமையாத முற்றினை ஒழிபியல் கூறுகின்றுழிக் கூறிய அதனாற் பெற்றதென்னை எனின், அஃது எமக்குப் புலனாயிற்றன்று. அஃதேல், வினையிலக்கணம் அறிந்தேனாகுங்கால் முற்றிலக்கணமும் அறிதல் வேண்டும் அன்றே? அதனை ஆண்டுக் கூறியவாறு ஈண்டுரைத்தல் வேண்டும் எனின், உரைக்குதும்.”

எனக் கூறி முற்றினிலக்கணம் கூறும் மூன்று நூற்பாக்களையும் வினையியலின் இறுதியில் வைத்துள்ளார். இங்ஙனம் பிறவுரையாசிரியர்கள் சிறிதும் சிந்தியாது நின்ற உண்மையினை இவர் கூறியது பாராட்டுதற் குரியதேனும், இம்மூன்று நூற்பாக்களும் வினையியலின் இறுதியில் இருப்பதைக் காட்டிலும், அதன் முதற்கண் இருப்பின் இன்னும் பொருத்தமுடையதாகும். இங்ஙனம் கூறுதற்குரிய காரணத்தை விளக்கவுரையில் விளக்கி எழுதியுள்ளேன். ஆண்டுக் காண்க.

(2) இங்ஙனமே எச்சவியலிலும் 14 ஆம் நூற்பாவை அடுத்து,

“இசைநிறை அசைநிலை பொருளொடு புணர்தலென்று
அவைமூன் றென்ப ஒருசொல் லடுக்கே”

என்னும் நூற்பாவைப் பிற உரையாசிரியர்கள் அனைவரும் வைத்திருக்க, இவர் மட்டும் இதனை 26 ஆம் நூற்பாவாக வைத்திருப்பது மிகமிகப் பாராட்டுதற்குரியதாகும். 27 ஆம் நூற்பா முதல் 30 ஆம் நூற்பாவரையிலுள்ள நூற்பாக்கள் இசைநிறை அசைநிலை பற்றிக் கூறுவனவாதலின் அவற்றோடியைய இந்நூற்பாவும் ஆண்டிருத்தலே பெரிதும் பொருத்தமாகும்.

(3) வேற்றுமை மயங்கியலில் 9 ஆம் நூற்பாவை அடுத்துப் பிறரெல்லாம்,

“அதுவென் வேற்றுமை உயர்திணைத் தொகைவயின்
அதுவென் உருபுகெடக் குகரம் வருமே”

என்னும் நூற்பாவையும், 12 ஆம் நூற்பாவையடுத்து,

“ஆறன் மருங்கின் வாழ்ச்சிக் கிழமைக்கு
ஏழு மாகும் உறைநிலத் தான”