இ - ள். கருவி என்னுஞ் சொல் தொகுதி என்னும் பொருள்படும், எ - று. எ - டு.‘கருவி வானம்’ (புறம்-159). (58) கமம் என்பதன் பொருள் இ - ள். கமம் என்னுஞ் சொல் நிறைந்து என்பதனோடு இயலும், எ - று. எ - டு. ‘கமஞ்சூல் மாமழை’ (அகம்-43) (குறுந்-158) (முருகாற்-7) (59) அரி என்பதன் பொருள் இ - ள். அரி யென்னுஞ் சொல் ஐது என்னும் பொருள்படும், எ - று. எ - டு. ‘அரிமயிர் திரண்முன்கை’ (புறம்-11) (60) கவவு என்பதன் பொருள் இ - ள். கவவு என்னுஞ் சொல் அகத்திடுதல் என்பதன் பொருள்படும், எ - று. எ - டு. ‘கழூஉவிளங் காரம் கவைஇய மார்பே’ (புறம்-19) (61) துவைத்தல், சிலைத்தல், இரங்கல், இயம்பல் என்பவற்றின் பொருள் 354. | துவைத்தலும் சிலைத்தலும் 1இரங்கலும் இயம்பலும் இசைப்பொருட் கிளவி யென்மனார் புலவர். |
இ - ள். துவைத்தல் என்னுஞ் சொல்லும், சிலைத்தல் என்னுஞ் சொல்லும், இரங்கல் என்னுஞ் சொல்லும், இயம்பல் என்னுஞ் சொல்லும் ஓசைப் பொருண்மையுடைய சொல், எ - று. எ - டு. ‘வரிவளை துவைப்ப’ ‘ஆமா நல்லேறு சிலைப்ப’ (முருகு-315). ‘ஏறிரங் கிருளிடை’ (கலி-46,) ‘கடிமரந் தடியு மோசை தன்னூர்-நெடுமதில் வரைப்பிற் கடிமனை யியம்ப’ (புறம்-36) (62) இரங்கல் என்பதற்கு மேலும் ஒரு பொருள் 355. | அவற்றுள், | | இரங்கல் கழிந்த பொருட்டு மாகும். |
இ - ள். மேற் சொல்லப்பட்டவற்றுள் இரங்கல் என்பது கழிந்தது என்னும் பொருளையும் உடைத்தாகும், எ - று. எ - டு. ‘செய்திரங் காவினை’ (புறம்-10.) (63)
1. இயம்பலும் இரங்கலும் என்பது ஏனை உரையாளர் பாடம்.
|