உரிச்சொற்களுக்குப் புறனடை 385. | மெய்பெறக் கிளந்த உரிச்சொல் எல்லாம் முன்னும் பின்னும் வருபவை நாடி ஒத்த மொழியாற் புணர்த்தனர் உணர்த்தல் தத்தம் மரபிற் றோன்றுமன் பொருளே. |
எடுத்து ஓதப்பட்ட உரிச்சொல் எல்லாவற்றிற்கும் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று. இ - ள். பொருள்பெறச் சொல்லப்பட்ட உரிச்சொல் எல்லாவற்றினையும் முன்னும் பின்னும் வருமொழிகளின் பொருண்மையை யாராய்ந்து. அவற்றிற்கியைந்த மொழியாற் புணர்ந்துரைக்கவே தத்தம் மரபினாற் பொருள் தோன்றும், எ-று. எனவே பல பொருளொருசொல் வந்துழி, முன்னும் பின்னும் வந்த மொழியறிந்து, அதற்கொப்பப் பொருளுரைக்க என்றவாறாம். உதாரணம் மேற் காட்டப்பட்டன. (93) இதுவும் அது 386. | கூறிய கிளவிப் பொருணிலை யல்லது வேறுபிற தோன்றினும் அவற்றொடுங் கொளலே. |
இதுவும் அது. இ - ள். மேல் ஓதப்பட்ட உரிச்சொற்கு ஓதப்பட்ட பொருணிலை யல்லது, பிறபொருள் தோன்றினும், சொல்லப்பட்டனவற்றோடு ஒரு நிகரனவாகக் கொள்க. எ-று. எ - டு. பேஎ நாறுந் தாழ்நீர்ப் பனிச்சுனை1 என்றவழிப் பேஎ என்பது மிகுதி குறித்து நின்றது. பொய்கை துவன்ற புனிறுதீர் பனுவல் என்றவழிப், புனிறு என்பது புதுமையின்கண் வந்தது. ‘கடிமலர்’ என்றவழி மணத்தின்கண் வந்தது. ‘மேன்முறைக் கண்ணே கடியென்றார் கற்றறிந்தார்’ என்றவழிக் கடியென்பது வதுவையின்கண் வந்தது. தூவற் கலித்த தேம்பாய் புன்னை’2என்றவழிக், கலித்தல் தழைப்பின் கண் வந்தது. அடர்பொ னவிரேய்க்கு மவ்வரி வாட3என்றவழி, அரி என்பது நிறத்தின்கண் வந்தது. பிறவும் இவ்வாறு வருவன அறிந்து கொள்க. (94) பொருட்குப் பொருள் தெரியற்க என்பது 387. | பொருட்குப்பொருள் தெரியின் அதுவரம் பின்றே. |
1. இறைய-உரை. சூ. 7. உரை. 2. புறம்-24. 3. பாலைக்கலி-22.
|