உரிச்சொற்கு உரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். பொருட்குப் பொருள்தெரியின் எல்லையின்று, எ-று.] அஃதாவது உறு என்பதற்குப் பொருள் மிகுதி யென்றால், மிகுதி யென்பதற்குப் பொருள் யாதெனில், அதற்கும் ஒரு வாய்பாட்டாற் பொருளுரைப்பின், அதற்குப் பொருள் யாதெனப் பின்னும் வினாவும்; அவ்வாறு வினாவ, அவ்வாராய்ச்சி முற்றுப் பெறாதாம். அதனால், வினாவுவானும் அவ்வாறு வினாவற்க; செப்புவானும் அவ்வாறு செப்பற்க என்றவாறு, வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்பதனால், இவ்வாராய்ச்சி பெயர்ச்சொற்கும் ஒக்குமென்று கொள்க. அஃதேல், அப்பொருண்மை யுணராதான் அதனை யுணருமாறு என்னையெனின், அது வருகின்ற சூத்திரத் தான் விளங்கும் என்க. (95) உணர்த்துமாறு உணர்த்தின் பொருட்குத் திரிபின்று எனல் 388. | பொருட்குத் திரிபில்லை உணர்த்த வல்லின். |
இஃது ஆசிரியன்கட் கிடந்ததோர் இயல்புணர்த்துதல் நுதலிற்று. இ - ள். பொருட்குப் பொருள் வினவிய மாணாக்கன் அவ்வாறு வினவானாம்; அவன் கொள்ளுமாறு ஆசிரியன் அஃதுணர்த்த வல்லனாயின், எ - று. என்றது, ஈண்டுப் பயின்றனவாக எடுத்தோதப்பட்ட சொற்களைப் பயிலாதாற்கு அவன் பயின்ற வாய்பாட்டான் உணர்த்துக. உணர்த்தவே, பொருட்குப் பொருள் ஆராய்தலில்லை என்றவாறு, அஃதேல், 1உறுதவ நனிஎன வரூஉம் மூன்றும்-மிகுதி செய்யும் பொருள என்ப என்பதனாற் பயனின்றாம்; அஃதறியாதாற்குப் பிறவாய் பாட்டாற் பொருளுணர்த்த வேண்டுதலி னெனின், அதற்கு விடை வருகின்ற சூத்திரத்தான் விளங்கும். (96) அப்பொருளுணர்ச்சியும் உணர்வார்க்கே இயலும் எனல் 389. | உணர்ச்சி வாயி லுணர்வோர் வலித்தே. |
மாணாக்கர்க்கு உரியதோ ரியல்பு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். உணர்ச்சி என்பது உணர்வு, வாயில் என்பது புலன், அஃதாவது உணரப்படுவது, உணர்வோர் வலித்து என்பது உணர்வோரது வலிமையுடைத்து. எ-று. என்றது. பயிலாதவற்றைப் பயின்றவை சார்த்தி உணர்த்துகின்றவழி, பயின்றவாக ஓதப்பட்டன, யாதும் அறியாதாரை நோக்கின அல்ல; உணர்வினான் உணரப்படுவனவற்றை யுணர்வாரை நோக்கிக் கூறப்பட்ட என்றவாறு, எனவே மேற்கூறிய கடாவிடை பெற்றதாம். (97)
1. சூ. 3.
|