எ - டு. சக்கரவர்த்தி இளமையும் நிலையாது, சக்கரவர்த்தி செல்வமும் நிலையாது. சக்கரவர்த்தி யாக்கையும் நிலையாது. “ஏமமாக இந்நில மாண்டோர் சிலரே,” “பெருங்கேளினினாளும்--பலரே யத்தைஅஃ தறியா தோரே-அன்னோர் செல்வமும் மன்னி நில்லா” எனவரும். இல்லாப்பொருளென உரைப்பவாலெனின் இல்பொருள் வழக்கின்றென மறுக்க. உம்மை கொடாக்கால் வருங்குற்றம் என்னை யெனின், பிற ரிளமையும் செல்வமும் யாக்கையும் நிற்குமெனப் பொருள்படு மாதலான் கொடுக்கவேண்டு மென்க. (32) செப்பு வழுவமைதி 33. | எப்பொரு ளாயினும் அல்ல தில்லெனின் அப்பொருள் அல்லாப் பிறிதுபொருள் கூறல். |
செப்பு வழுவமைதி உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். யாதானும் ஒருபொருளாயினும் அல்லது என்னும் சொல்லொடு கூட்டி இல்லை எனக் குறித்தான் ஆயின், அவன் வினாவிய பொருள் அல்லாத பிறிதாய பொருளைச் சொல்லுக, எ - று. எனவே அதனொடு கூட்டிச் சொல்லுக என்றவாறாம். ‘அப்பொருள் அல்லாப் பிறிது’ என்றமையான் அதற்கு இனமாகிய பொருளே சொல்லப்படும். பயறு உளவோ வணிகீரே என்றார்க்கு உழுந்தல்லது இல்லை என்க. கொல்லவன் பட்டு உளவோ என்றால் கோசிகம் அல்லது இல்லை என்க. எனவே அவன் கருத்திற்கேற்று வினாவியபொருளை இல்லை என்னாது, பிறிது ஒன்று கூறுதல் வழுவாயினும், அப்பொருள் பயத்தலின் அமைதியாயிற்று. (33) செப்பில் வழாநிலை 34. | அப்பொருள் கூறின் சுட்டிக் கூறல். |
செப்பின்கண் வழுக்காத்தலை நுதலிற்று. இ - ள். வினாவிய பொருளையே சொல்லி அல்லதில்லையெனின், சுட்டிக் கூறுக, எ - று. இப்பயறு அல்லதில்லை; இப்பட்டு அல்லதில்லை என்க. எனவே அவன் கருத்திற்கேற்ற பயறும் பட்டும் இல என்றவாறாம். (34) செப்பு வழுவமைதி 35. | பொருளொடு புணராச் சுட்டுப்பெய ராயினும் பொருள்வேறு படாஅ தொன்றா கும்மே. |
|