9. எச்சவியல் செய்யுள் செய்தற்கு உரிய சொற்கள் 393. | இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென் றனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே. |
என்பது சூத்திரம். இவ்வோத்து என்ன பெயர்த்தோ வெனின், எச்சவியல் என்னும் பெயர்த்து; கிளவியாக்கம் முதலாக உரிச்சொல்லோத்து ஈறாகக் கிடந்த எட்டோத்தினுள்ளும் உணர்த்தாத பொருளை ஈண்டுணர்த்துதலாற் பெற்ற பெயர். இதன் தலைச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், ஒருவகையாற் செய்யுட்குரிய சொல்லின் பாகுபாடுணர்த்துதல் நுதலிற்று. இ - ள். இயற்சொல்லும், திரிசொல்லும், திசைச் சொல்லும், வடசொல்லும் எனவரும் நால்வகைத்து, செய்யுளாக்குதற்குரிய சொல், எ-று. அவையாமாறு தத்தம் சிறப்புச் சூத்திரத்தான் உணரப்படும். (1) இயற் சொல்லிற்கு இலக்கணம் 394. | அவற்றுள், இயற்சொல் தாமே, செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித் தம்பொருள் 1வழாமல் இசைக்கும் சொல்லே. |
நிறுத்த முறையானே இயற்சொல்லாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். இயற்சொல்லாவன தாம், செந்தமிழ் நாட்டு வழக்கோடு பொருந்தித் தம்பொருள் வழாமல் இசைக்குஞ் சொற்கள், எ-று. செந்தமிழ் நாடாவது:--வையையாற்றின் வடக்கும், மருதயாற்றின் தெற்கும், கருவூரின் கிழக்கும், மருவூரின் மேற்கும் என்ப. இவ்வாறு உரைத்தற்கு ஓர் இலக்கணங் காணாமையானும், வையை யாற்றின் தெற்காகிய கொற்கையும், கருவூரின் மேற்காகிய கொடுங்கோளூரும், மருதயாற்றின் வடக்காகிய காஞ்சியும் தமிழ்திரிநிலமாதல் வேண்டுமாதலானும், அஃது உரையன்று என்பார் உரைக்குமாறு;-
1. ‘வழாஅமை யிசைக்கும்’ எனப் பாடங் கொள்வர் இளம்பூரணர். ‘வழாமை யிசைக்கும்’ எனப் பாடங் கொள்வர் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும்.
|