| 1வடவேங்கடந், தென்குமரி, ஆயிடைத், தமிழ்கூறு நல்லுலகத்து, வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலின் எழுத்துஞ் சொல்லும் பொருளு நாடி. |
என்றமையானும், இதனுள் தமிழ் கூறும் நல்லுலகமென விசேடித் தமையானும், கிழக்கும் மேற்கும் எல்லைகூறாது தெற்கெல்லை கூறியவதனாற் குமரியின் தெற்காகிய நாடுகளை யொழித்த வேங்கடமலையின் தெற்கும், குமரியின் வடக்கும், குணகடலின் மேற்கும், குடகடலின் கிழக்கு மாகிய நிலம் செந்தமிழ் நிலமென்றுரைப்ப. அந்நிலத்து வழக்கொடு சிவணித் தம்பொருள் வழாமல் இசைக்குஞ் சொல்லாவன:--சோறு, கூழ் மலை, மரம், உண்டான், தின்றான், ஓடினான், பாடினான் என்னுந் தொடக்கத்தன. இவை அந்நிலத்துப்பட்ட எல்லா நாட்டினும் ஒத்து இயறலின் இயற்சொல்லாயின. இவற்றைச் செஞ்சொல் எனினும் அமையும். (2) திரிசொல்லிற்கு இலக்கணம் 395. | ஒருபொருள் குறித்த வேறுசொல், லாகியும் வேறுபொருள் குறித்த வொருசொல் லாகியும் இருபாற் றென்ப திரிசொற் கிளவி. |
திரிசொல்லாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். ஒருபொருள் குறித்த வேறு வேறு சொல்லாகியும், வேறு வேறு பொருள் குறித்த ஒரு சொல்லாகியும் அவ்விரு பகுதியதென்ப திரிசொல், எ - று. எனவே, இயற்சொல்லா லுணர்த்தப்படும் பொருண்மேல் வேறுபட்ட வாய்பாட்டான் வருவன திரிசொல்லாகும் என்றவாறாம். அஃதேல், உரிச்சொல்லோ டிதனிடை வேறுபாடு என்னையெனின், உரிச்சொல் குறைச் சொல்லாகிவரும்; திரிசொல் முழுச் சொல்லாகி வரும் என்க. இதனை, இயற்சொல்லைச் சாரவைத்ததனாற் செந்தமிழ் நாட்டுட்பட்ட தேயந்தோறும் தாம் அறிகுறியிட்டாண்ட சொல்லென்று கொள்க. அவையாவன: மலை யென்பதற்குக் குன்று, வரை யெனவும், குளம் என்பதற்குப் பூழி, பாழி எனவும், வயல் என்பதற்குச் செய், செறு எனவும் வருவன. இவை ஒரு பொருள் குறித்தன. அரங்கம் என்பது யாற்றிடைக் குறையையும், ஆடுமிடத்தையும், இல்லின்கண் ஒரு பக்கத்தினையும் உணர்த்தும். துருத்தி என்பது யாற்றிடைக் குறையையும், தோற் கருவியையும், உணர்த்தும். ஆழி யென்பது கடலையும், நேமியையும், வட்டத்தையும் உணர்த்தும், இவை வேறு வேறு பொருள் குறித்தன. இவ்வாறு திரிந்து வருதலிற் றிரிசொல்லாயிற்று. (3)
1. தொல், எழுத்து, பாயிரம்.
|