190தொல்காப்பியம்[எச்சவியல்]

190

திசைச் சொல்லிற்கு இலக்கணம்

396.செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்துந்
தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி.

திசைச் சொல்லாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். செந்தமிழ் நாட்டைச் சேர்ந்த பன்னிரு நிலத்து முள்ளார் தத்தங் குறிப்பினையுடையது திசைச் சொல்லாகிய சொல், எ - று.

பன்னிரு நிலமாவன:--வையையாற்றின் தென்கிழக்காகிய பொதுங்கர் நாடு, ஒளி நாடு, தென் பாண்டிநாடு, கருங்குட்டநாடு, குட நாடு, பன்றி நாடு, கற்காநாடு, சீதை நாடு, பூழி நாடு, மலாடு, அருவா நாடு, அருவா வடதலை என்பன.1 இவை செந்தமிழ் நாட்டகத்த.

செந்தமிழ் சேர்ந்த நாடென்றமையால், பிறநாடாகல் வேண்டுமென்பார் உதாரணங் காட்டுமாறு:--“கன்னித் தென்கரைக் கடற் பழந்தீபம், கொல்லங் கூபகஞ் சிங்கள மென்னும், எல்லையின் புறத்தவும் கன்னடம் வடுகம், கலிங்கம் தெலிங்கம், கொங்கணம,் துளுவம், குடகம், குன்றகம்” என்பன. “குடபா லிருபுறச் சையத் துடனுறைபு கூருந் தமிழ்திரி நிலங்களும், முடியுடை மூவ ரிடுநில வாட்சியின், அரசு மேம்பட்ட குறுநிலக்குடுமிகள், பதின்மரும் உடனிருப் பிருவரும் படைத்த, பன்னிரு திசையில் சொன்னய முடையவும்” என்பது அகத்தியச் சூத்திரம். இதனுள் எல்லையின் புறத்தவும், தமிழ்திரி நிலங்களுமாகிய பன்னிரு அரசரும் படைத்த பன்னிரு தேயத்தினும், தமிழ்ச் சொல்லாதற்கு விருப்புடையனவும் என்றமையானும் “தமிழ் கூறு நல்லுலகத்து, வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலின், எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி” என நிறுத்துப் பின்னுஞ் “செந்தமி ழியற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு” என ஓதிய வதனால், சிவணிய நிலமாவது எல்லை குறித்த நிலத்தைச் சார்ந்த நிலமென வேண்டுதலானும், பன்னிரு நிலமாவன:--குமரியாற்றின் தென்கரைப் பட்ட பழந்தீபமும் கொல்லமும் கூபகமும் சிங்களமும், சையத்தின் மேற்குப்பட்ட கொங்கணமுந் துளுவமுங் குடகமுங் குன்றகமும், கிழக்குப்பட்ட கருநடமும் வடுகும் தெலிங்கும் கலிங்கமும் என்று கொள்ளப்படும்.

இவற்றுள், கூபகமுங் கொல்லமுங் கடல்கொள்ளப்படுதலின், குமரியாற்றின் வடகரைக்கண் அப்பெயரானே கொல்லமெனக் குடியேறினார் போலும். பஞ்சத்திராவிடமெனவும் வட நாட்டார் உரைப்ப வாகலான்2 அவையைந்தும் வேங்கடத்தின் தெற்காதலுங் கூடாமை யுணர்க.

அந்நிலத்து வழங்குஞ் சொல்லாகிச் 3செஞ்சொல்லின் வேறுபட்டுச் சான்றோர் செய்யுளகத்து வருவன நீக்கப்படா, எ - று.


1. இங்ஙனம் கூறுவோர் இளம்பூரணர்; இதனுட் காணப் பெறாத மற்றோர் நாட்டின் பெயர் பொங்கர் நாடு என்பது இளம்பூரணம்.

2. இக் கொள்கையினை நச்சினார்க்கினியர் மேற்கொண்டு இவ்வாசிரியர் காட்டிய காட்டினையே எடுத்துக்காட்டுவர்.

3. செஞ்சொல்--இயற்சொல். (எச்.1-சூ.)