[எச்சவியல்]சொல்லதிகாரம் தெய்வச்சிலையார்191

191

குடாவடியுளியம் 1என்றவழிக், குடா, என்பது குடகத்தார் பிள்ளைகட்கு இட்ட பெயர். அந்தோ என்பது சிங்களவர் ஐயோ என்பதற்கிட்ட பெயர். யான் தற்கரைய வந்து என்றவழிக், கரைதல் என்பது கருநாடர் விளிப்பொருளுணரக் கூறுவது. செப்பு என்பது வடுகர் சொல்லுதற்குப் பெயராக வழங்குவது. பாண்டில் என்பது தெலிங்கர் பசுவிற்கும் எருத்திற்கும் பெயராக வழங்குவது; கொக்கு என்பது துளுவர் மாவுக்குப் பெயராக வழங்குவது. பிறவும் இவ்வாறு வருவன பலவற்றையும் வந்தவழிக் கண்டு கொள்க.

(4)

வட சொல்லிற்குரிய இலக்கணம்

397.வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே.

வடசொற்கிளவி யாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். வடசொல்லாகிய சொல்லாவது வடமொழிக்கேயுரியவாகிய எழுத்தை நீக்கித் தமிழ்மொழிக்குரிய எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும், எ - று.

எல்லா நாட்டிற்கும் பொதுவாயினும், வடநாட்டிற் பயில வழங்குதலின் வடசொல் ஆயிற்று. வடசொல்லென்றதனால் தேய வழக்காகிய பாகதச் சொல்லாகி வந்தனவுங் கொள்க.

வடமொழியாவன:--வாரி, மணி, குங்குமம் என்னுந் தொடக்கத்தன. வட்டம், நட்டம், பட்டினம் என்பன பாகதம், பிறவும் அன்ன.

(5)

மேலதற்குப் புறநடை

398.சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்.

மேலதற்கோர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். எழுத்தொடு பொருந்திய சொல்லே யன்றிச் சிதைந்த சொற்கள் வரினும், தமிழ்வழக்கிற்குப் பொருந்தினவை நீக்கப்படா, எ- று.

அவையாவன;--கந்தம், தசநான்கு, சாகரம், சத்திரம், முத்து, பவளம் எனவரும், பாகதச் சிதைவாகி வருவனவுங் கொள்க.

இவை நான்கு சொல்லினும். இயற்சொல் பெயர்ச் சொல்லும், வினைச் சொல்லும், இடைச்சொல்லும், உரிச்சொல்லுமாகி வரும். திரிசொல்லுந், திசைச் சொல்லும் பெரும்பான்மை பெயரும், சிறுபான்மை வினையுமாகி வரும், வடசொல் பெயரா யல்லது வாராது.

(6)


1. முருகாற்- 313.