வணக்கி விறல்மதிறான் கோடல்” என்றவழி, வேண்டாதாரை யென்பது வேண்டார் எனத் தொக்கு நின்றது. தொகுத்தலென்பது சுருக்குதல். அஃதேல், அத் தா என்பது இவ்விலக்கணத்தால் தொகுக. ஐ என்பது “உருபு தொக வருதல்” என்புழி அடங்காதோ எனின், ஐகாரம்1 “உயர்திணை மருங்கின் ஒழியாது வருதலும்” என ஓதப்படுதலின், அஃது உயர்திணைக்கண் தொகாது நிற்கவேண்டும். ஆயினும், செய்யுளின்பம் வேண்டித் தொகப்பெறு மென்பது இவ்விலக்கணத்தாற் கொள்ளப்படும். “பாசிழையாகம் பசப்பித்தான்” என்றவழி, பச்சிழை எனற்பாலது பாசிழை என நீண்டு நின்றது. “திருத்தார் நன்றென்றேன் தியேன்” இதனுள், தீயேன் என்பது தியேன் எனக் குறுகி நின்றது. அந்நாற் சொல்லும் இவ்வாறு விகாரப்படும் என்றமையான், ஒரு மொழிக்கண்ணே இவை வருவன உணர்க. (7) பொருள் புணர் இயல்பு நான்கு 400. | நிரனிறை சுண்ணம் அடிமறி மொழிமாற் றெனநான் கென்ப பொருள்புண ரியல்பே.1 |
செய்யுளகத்துப் பொருளுணரச் சொற்றொடுக்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். நிரனிறையும், சுண்ணமும், அடிமறியும், மொழி மாற்றும் என நான்கென்று சொல்லுப: பொருள் மேல் மொழி புணர்க்கும் இயல்பு, எ - று. செய்யுளகத்துத் திரிந்து பொருள்படுஞ்சொல் எடுத்தோதினார்: வழக்கின்கண் இயல்பாகிச், செய்யுட்கண்ணும் இயல்பாகி நடக்கும் பொருள்கள் ஓதவேண்டாமையின், அவையாமாறு தத்தம் சிறப்புச் சூத்திரத்துட் காட்டுதும். (8) நிரனிறைப் பொருள்கோள் 401. | அவற்றுள். நிரனிறை தானே வினையினும் பெயரினும் நினையத் தோன்றிச் சொல்வேறு நிலைஇப் பொருள்வேறு நிலையல். |
நிரனிறை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். மேற்சொல்லப்பட்டவற்றுள், நிரனிறையாவது வினையானும், பெயரானும் ஆராயப் புலப்படுஞ் சொற்களைச் சேர நிறுத்தி, அவற்றிற்கு முடிபாக வருஞ் சொற்களைச் சேர நிறுத்துதல், எ-று.
1. எழுத் - 157. 2. மொழிபுணர் இயல்பே என்பது ஏனைய உரையாசிரியர்கள் கொண்ட பாடம்.
|